ஜெயலலிதா மரண மர்மம்: ஆறுமுகசாமி ஆணையத்தில் 2வது நாளாக ஆஜரான ஓபிஎஸ் - எகிற வைக்கும் எதிர்பார்ப்பு
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று மீண்டும் ஆஜராகி பதிலளித்து வருகிறார். நேற்றைய தினம் ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட பல கேள்விகளுக்கு தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்த பன்னீர் செல்வம் இன்று எந்த மாதிரி பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி தர்மயுத்தம் தொடங்கியவரே ஓ.பன்னீர் செல்வம்தான். அவர் எழுப்பிய சந்தேகத்தின் பேரிலேயே ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைச்சர்கள், எம்பிக்கள், அப்போலோ டாக்டர் எனப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
ஜெயலலிதாவின் உடல்நலத்தில் இருந்த பிரச்சினை பற்றி அப்பல்லோ மருத்துவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு விளக்கம் அளித்தனர். சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அவர் ஓரிருமுறைதான் கண்ணாடி வழியாக மட்டுமே ஜெயலலிதாவைப் பார்த்ததாக கூறினார்.

ஓ.பன்னீர் செல்வம் ஆஜர்
ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகக் கூறி எட்டுமுறை சம்மன் அனுப்பியும் தவிர்த்து வந்த ஓ.பன்னீர் செல்வம், நேற்றைய தினம் முதல்முறையாக எழிலகத்தில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் காலை முதலே பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதில் பல கேள்விகளுக்கு தெரியாது என்றே பதில் அளித்தார். மெட்ரோ ரயில் விழாவில் மட்டுமே ஜெயலலிதாவை பார்த்ததாக கூறினார் ஓ.பன்னீர் செல்வம்.

எதுவும் தெரியாது
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று என்ன நடந்தது என்பது குறித்து எதுவும் தெரியாது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரமும் தெரியாது என்று கூறிய அவர் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சொந்த ஊரில் இருந்த போதுதான், ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக அறிந்துகொண்டேன் என்று பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார்.

வெளிநாடு சிகிச்சை
மதியம் மீண்டும் விசாரணை நடந்த போது காவிரி ஆணையக்கூட்டம் பற்றியும் ஜெயலலிதாவை வெளிநாடு சிகிச்சைக்கு அழைத்துச்செல்லாதது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் அண்ணா, எம்.ஜி.ஆர். போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் சொன்னேன். அப்போலோ மருத்துவர்களிடம் பேசிய பிறகு வெளிநாடு செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.

வீடு திரும்புவதாக சொன்னார்கள்
ஜெயலலிதா வெளிநாடு அழைத்துச் செல்வது தொடர்பாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் எதுவும் கூறவில்லை. வெளிநாடு அழைத்துச் செல்வது பற்றி ராமமோகன்ராவ் தன்னிடம் பேசவில்லை. கேட்டு இருந்தால் கையெழுத்து போட்டிருப்பேன்.ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும் ஒரு வாரத்தில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர் விஜயகுமார் கூறியதாக ஓபிஎஸ் பதிலளித்தார்.

சிசிடிவி கேமரா நான் அகற்ற சொல்லவில்லை
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது அப்போலோ மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராக்களை அகற்றச் சொன்னது யார் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர் தான் கூறவில்லை என்று விளக்கமளித்தார். மேலும், தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதல்வர் ஆனது வரை தான் பேசியது அனைத்தும் சரியானதே என்றும் அவர் தெரிவித்தார்.

எனக்கு தெரியாது
ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சிகிச்சை அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எனக்கு தெரியாது என்று கூறினார். நேற்று காலையிலிருந்து நடைபெற்ற விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திடம் ஆணையம் சார்பாக வழக்கறிஞர் 78 கேள்விகளை கேட்டுள்ளார். ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்றும் விளக்கம் தரும் ஓபிஎஸ்
ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓபிஎஸ் பல கேள்விகளுக்கு தெரியாது என்று கூறியுள்ளதால் இன்றைய தினம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவமனையில் சிசிடிவியை அகற்றச் சொன்னது யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்தால் மட்டுமே அவரது மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications