எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், அய்யப்பன்! திமுகவில் இணைந்த பின் அதிரடி முடிவு
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (OPS) மற்றும் அவரது ஆதரவாளரான உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் ஆகியோர் இன்று தமது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து உள்ளனர்.ஓபிஎஸ், தமது ஆதரவாளர்களோடு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஓபிஎஸ் மகனும், முன்னாள் எம்.பியுமான ரவீந்திரநாத் குமாரும் திமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது நிதி அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தார். அதிமுகவின் பொருளாளராகவும் இருந்தார். ஜெயலலிதா முதல்வராக நீடிக்க முடியாத சூழல்களில் 2001, 2014-ல் அவருக்கு பதிலாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக சிறிது காலம் பதவி வகித்தார். 2016-ல் ஜெயலலிதா மறைந்த போதும் சில மாதங்கள் முதல்வராக இருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடனான மோதலைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் தம்மை மீண்டும் சேர்க்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை ஓபிஎஸ் மேற்கொண்டார். ஆனால் ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்க முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்து வருகிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார் ஓபிஎஸ். இப்போது பாஜக அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளதால் ஓபிஎஸ் தனித்து விடப்பட்டார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலிலும் ஓபிஎஸ் பக்கம் காற்று வீசாத நிலையில், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் தவெகவிலும் பலர் மீண்டும் அதிமுகவுக்கும் சென்றுவிட்டனர்.
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் ஆகியோர் மட்டும் என்ன முடிவு எடுப்பது என்ற குழப்பத்தில் இருந்தனர். அண்மையில் சட்டசபை கூட்டத்தொடரின்போது, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார் ஓபிஎஸ். மீண்டும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என ஐயப்பன் சட்டசபையிலேயே பேசி இருந்தார்.
இந்நிலையில் திமுகவில் இணைய ஓபிஎஸ் முடிவு எடுத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஓபிஎஸ் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பனும், ஓபிஎஸ் மகனும் முன்னாள் எம்.பியுமான ரவீந்திரநாத் குமார், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் திமுகவில் இணைந்துள்ளனர்.

5 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். 2001 மற்றும் 2006ல் பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏவாகவும், 2011, 1016, 2021 தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்தும் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ ஆனார். இந்நிலையில் தமது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்டசபை செயலரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
திருமங்கலத்தைச் சேர்ந்த பி அய்யப்பன், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் முறையாக உசிலம்பட்டி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். 2022 ஆம் ஆண்டு முதல் ஓபிஸ்ஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அய்யப்பன் இன்று தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார், 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனார். 2019ல் தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் அவர்தான். இந்நிலையில், முன்னாள் எம்.பியான ரவீந்திரநாத்தும் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications