கரை வேட்டி மாறுதா? திமுகவில் ஐக்கியமாகும் ஓ.பன்னீர்செல்வம்! அதகளமான அதிமுக! அவரே சொன்ன விளக்கம்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி கிடைக்காததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். இந்த நிலையில் தான் திமுகவில் இணைய போவதாகவும், அந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் வதந்திகள் பரப்பப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஜெயலலிதா ஆட்சி அமைப்பதே தனது லட்சியம் எனவும் உறுதிப்பட ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் கூட்டணி மாற்றங்கள் நிகழப்போவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கிறது. நீண்ட காலமாக பாஜக ஆதரவாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பின் முழுக்க முழுக்க பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த ஓபிஎஸ், கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து இரட்டை இலை சின்னத்திற்கு எதிராகவே போட்டியிட்டார். இதனால் அதிமுகவில் இனி அவருக்கு இடமே இல்லை என உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில் ஓபிஎஸ்ஐ வெளியேற்ற வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் முக்கிய கோரிக்கை என சொல்லப்படுகிறது. இதை அடுத்து கடந்த சில நிகழ்வுகளில் ஓ.பன்னீர்செல்வம் பாஜக தரப்பால் புறக்கணிக்கப்பட்டார். குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வந்த நிலையில் அவரை சந்திக்க விரும்பினார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில் அடுத்த நாளே மத்திய அரசை கண்டித்து அறிக்கை விட்டார் ஓபிஎஸ் அதனை தொடர்ந்து காலையில் வாக்கிங் செல்லும் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பிறகு முதல்வர் ஸ்டாலினின் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் உள்ளிட்டோர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தனர். ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் கூறிய நிலையில் அவர் திமுகவில் இணையப் போவதாகவும் அல்லது திமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இது குறித்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ். அதில்," 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பதே எங்கள் நோக்கம் தமிழ்ப் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் முதல்வரை சந்தித்தேனே தவிர, இதில் அரசியல் இல்லை; நான் எங்கிருந்தாலும் மக்களின் உரிமை, நலன் என்று வந்தால் ஜெயலலிதா வழியில் செயல்படக் கூடியவன்.
நான் திமுகவில் இணையப் போவதாகவும், அக்கட்சி உடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் வதந்திகள் பரப்பப்படுகின்றன. முதல்வர் இல்லத்திற்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதை அரசியல் ஆக்குவது நாகரிகமற்ற செயல். முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் சிறிதும் அரசியல் இல்லை. முக முத்து மறைவையொட்டி முதல்வருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
மேலும் கல்வி நிதி வழங்காத மத்திய அரசை தற்போது தான் கண்டிப்பதை போல சிலர் விமர்சிக்கின்றனர். தமிழகத்திற்கு போதிய நிதியை விடுவிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதுமட்டுமின்றி பெரியார், அறிஞர் அண்ணாவை விமர்சித்த போது இந்து முன்னணியை கண்டித்தேன். ஜெயலலிதாவை பாஜக முன்னாள் தலைவர் விமர்சித்த போது அதற்கும் கண்டனம் தெரிவித்தேன். இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருக்கிறேன். வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் வாக்களிக்க உத்தரவிட்டேன்.. என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications