ஒரே அறையிலா? வேலுமணி வருகிறாரா? ஒரு முடிவோடு போன ஓபிஎஸ்.. சட்டென அப்பாவுவை போய் பார்த்து.. என்னாச்சு
சென்னை: அதிமுக மோதலுக்கு இடையில் தமிழ்நாடு சட்டசபை தொடர்பான அலுவல் ஆய்வு கூட்டம் இன்று சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் நாளையும், நாளை மறுநாளும் நடக்க உள்ளது. இன்று முதல்நாள் கூட்டம் என்பதால் சட்டசபையில் மசோதாக்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

மாறாக மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் மட்டும் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தை அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்தனர்.
எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, அந்த பதவியில் ஆர்பி உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை வைத்தது. இதை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இன்று அவையை புறக்கணித்தது.

இந்த சட்டசபை கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரம்மி தடை தொடர்பான அவசர சட்டம் குறித்த மசோதா இந்த கூட்ட தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் அவையில் நாளை தமிழ்நாடு சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை நாளை சட்டசபையில் வைக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அதோடு அருணா ஜெகதீசன் அறிக்கையும் சட்டசபையில் வைக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவையில் என்னென்ன விஷயங்கள் நடக்க வேண்டும், எத்தனை நாள் அவை கூட வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டது. பொதுவாக இந்த ஆலோசனை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்படும். இந்த குழுவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் இருப்பார்கள்.
அவர்கள் கூடி அவை நிகழ்வுகள் குறித்து முடிவு எடுப்பார்கள். அதன்படியே இன்று கூட்டம் நடந்தது. எதிர்க்கட்சி துணை தலைவர் என்ற முறையில் ஓபிஎஸ் பெயர் இதில் இருந்தது. அதேபோல் அதிமுக கொறடா என்ற முறையில் எஸ்.பி வேலுமணி பெயர் இருந்தது. எஸ்.பி வேலுமணி இன்று சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தாலும் சட்டசபை வந்தார்.

கூட்டம் முடிந்த பின், அவர் உள்ளே வந்து இந்த அலுவல் கூட்டத்தில் மட்டும் கலந்து கொண்டார். இதனால் ஒரே அறையில் வேலுமணி, ஓபிஎஸ் ஆகியோர் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக ஓபிஎஸ் வேகவேகமாக அப்பாவு அறைக்கு இன்று சென்றார்.
அங்கு சென்று.. தன்னுடைய கருத்துக்களை அவர் தெரிவித்தார். ஒரு முடிவோடு சென்ற அவர், அவை நிகழ்வு தொடர்பான தன்னுடைய ஆலோசனைகளை வழங்கிவிட்டு ஆய்வுக் குழு கூடும் முன் அங்கிருந்து கிளம்பி சென்றார். இதனால் அந்த கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.
அதன்பின் எஸ்.பி வேலுமணி மட்டும் அதன்பின் வந்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். இதன்பின்பே அவையை இன்னும் 2 நாட்கள் நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications