ஆட்டத்தில் ட்விஸ்ட்.. ஓ.பன்னீர்செல்வம் சபரீசன் திடீர் சந்திப்பு: அதிமுக மட்டுமல்ல.. அதிர்ந்த இணையம்!
சென்னை: சேப்பாகத்தில் இன்று நடைபெற்ற சிஎஸ்கே - மும்பை அணி இடையேயான போட்டியைக் காண ஓ.பன்னீர்செல்வம் வந்திருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் போன்றோரும் வந்திருந்தனர். இந்நிலையில், மேட்ச் முடிந்த பிறகு ஓபிஎஸ் - சபரீசன் சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2023 தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ல் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சிஎஸ்கே அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது.

13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும் சென்னை - மும்பை போட்டியை நேரில் காண திரையுலக பிரபலங்கள் பலரும் ஸ்டேடியத்திற்கு வந்திருந்தனர். நடிகர் தனுஷ், அனிருத், நயன்தாரா, விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் மைதானத்துக்கு நேரில் வருகை புரிந்துள்ளனர்.
அதேபோல் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இன்றைய போட்டியைக் காண வந்திருந்தார். இதில் ஹைலைட்டான விஷயம், சேப்பாக்கத்தில் அண்மையில் திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து போட்டியை ரசித்தார் ஓபிஎஸ்.

சேப்பாக்கத்தில் அண்மையில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான சிஎஸ்கே போட்டிகளைக் காண தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தார். தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே விளையாடும் அனைத்து போட்டிகளையும், தனது தொகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், சிறுமியருடன் நேரில் கண்டுகளித்து வருகிறார்.
இன்றைய போட்டியை காண வந்திருந்த முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்துப் பேசியுள்ளார். சபரீசன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திமுகவிற்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார் என விமர்சித்து வருகிறார் ஈபிஎஸ்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஓபிஎஸ், சபரீசனை சந்தித்துப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் அதிமுக மற்றும் ஓபிஎஸ் தரப்பிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications