சூத்திரதாரி "பண்ருட்டி".. ஓபிஎஸ் "மாஸ்டர் பிளான்".. தொடங்கியது மா.செ கூட்டம்.. அமித் ஷா தந்த ஐடியா?
சென்னை: அதிமுக ஓ பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. போட்டி பொதுக்குழுவை நடத்துவது தொடர்பாக இன்று மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
அதிமுக பொதுக்குழு வழக்கு இப்போதைக்கு முடிவிற்கு வருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. அதிமுக பொதுக்குழு வழக்கு.. கிட்டத்தட்ட கன்னித்தீவு கதை போல.. மிக நீளமாக சென்று கொண்டே இருக்கிறது. இந்த வழக்கில் இந்த வருடம் தீர்வு கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது.
வழக்கு விசாரணை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு தரப்பிற்கும் இடையில் சட்ட போராட்டம் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

டெல்லி ஆதரவு
இன்னொரு பக்கம் டெல்லியில் பாஜகவின் ஆதரவை பெற.. அதாவது மோடி - அமித் ஷாவின் ஆதரவை பெற எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் இருவரும் தீவிரமாக முயன்று கொண்டு இருக்கின்றனர். அதாவது டெல்லியின் ஆதரவு தங்களுக்கு இருந்தால் வழக்கில் வெற்றிபெறலாம், நிர்வாகிகள் நம்முடைய பக்கம் வருவார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள். இதனால் எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் இருவருமே அவ்வப்போது மோடியை சென்று சந்திப்பது, அமித் ஷாவை சென்று சந்திப்பது என்று பாஜகவின் ஆதரவை பெற தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார்கள்.

ஓ பன்னீர்செல்வம்
இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் இன்று, டிசம்பர் 21ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறார். சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்து வருகிறது. அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சமீபத்தில் ஓபிஎஸ் நியமித்தார். தற்போது அவரின்தலைமையில்தான் இந்த கூட்டம் நடந்து வருகிறது. ஓபிஎஸ் நியமனம் செய்த மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் இன்று இந்த கூட்டத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் ஒன்றாக கூடி பல்வேறு ஆலோசனைகளை செய்ய உள்ளனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. எடப்பாடிக்கு எதிராக போட்டி பொதுக்குழுவை நடத்துவது தொடர்பாக இன்று ஆலோசனை செய்ய உள்ளனர். இந்த கூட்டத்தை அவர் நடத்த முக்கியமான காரணம் உள்ளது.

என்ன காரணம்
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் ஏற்கனவே தனியாக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஆகியோரை நியமனம் செய்து வருகிறார். இந்த மாவட்ட செயலர்களை வைத்து ஓ பன்னீர்செல்வம் நடத்தும் கூட்டம் தொடர்பான புகைப்படங்கள், ரிப்போர்ட்கள் உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் சமர்ப்பிக்கும் எழுத்துபூர்வமான வாதத்தோடு சமர்ப்பிக்கப்படும். அதில்.. என் பக்கமும் கட்சி நிர்வாகிகள் இருக்கிறார்கள். கட்சியில் இரண்டு குழுக்கள் இருக்கிறது.

திட்டம் என்ன?
இதனால் ஒரு குழுவை மட்டும் அங்கீகரிக்கவே கூடாது. எனக்கு ஆதரவு இருக்கிறது பாருங்கள் என்று ஓ பன்னீர்செல்வம் சொல்ல திட்டமிட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. எடப்பாடி தனக்குத்தான் பெரும்பான்மை இருக்கிறது என்று சொல்லும் நிலையில் அந்த வாதத்தையே உடைத்து நொறுக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். இதனால்தான் ஓ பன்னீர்செல்வம் திடீரென இந்த கூட்டத்தை நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது. இது உச்ச நீதிமன்றத்தில் எடுபடாமல் போனாலும் தேர்தல் ஆணையத்தில் இரண்டு அணிகள் இருப்பதை நிரூபித்து இரட்டை இலை சின்னத்தை முடக்கலாம் என்ற திட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் இப்படி செய்வதாக கூறப்படுகிறது.

அமித் ஷா
சமீபத்தில் குஜராத்தில் அமித் ஷாவை பார்த்த ஓ பன்னீர்செல்வம், சில விஷயங்களை வெளிப்படையாக சொன்னதாக தெரிகிறது. எனக்கு உறுதுணையாக இருங்கள். கஷ்டமாக இருக்கிறது. டெல்லி எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது. அதிமுக ஒன்றாக இருந்தால்தான் பாஜகவிற்கு பலன் என்று ஓ பன்னீர்செல்வம் கூறியதாக தெரிகிறது. இதற்கு பதில் அளித்த அமித் ஷா.. நீங்கள் எங்களின் சப்போர்ட் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு எங்களின் சப்போர்ட் எப்போதும் இருக்கும். கட்சி ரீதியாக உங்கள் பணிகளை கவனியுங்கள். உங்களுக்கான ஆதரவை நிலைநிறுத்திக்கொள்ளுங்கள். அதற்கான பணிகளை தொடங்குங்கள் என்று அமித் ஷா சொன்னதாக கூறப்படுகிறது. இதையடுத்தே சந்தோசமாக சென்னைக்கு வந்த ஓ பன்னீர்செல்வம் அங்கு முக்கியமான முடிவை எடுத்துள்ளார். இதையடுத்தே இன்று, ஓ பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த இருக்கிறார்.












Click it and Unblock the Notifications