தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்!
இந்திய மக்களின் வாழ்வில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது ஒரு மிக முக்கியக் குடும்பச் சேமிப்பாகவும், அவசர காலப் பொருளாதாரப் பாதுகாப்பாகவும் பார்க்கப்படுகிறது. தமிழர்களின் தீராத இந்தத் தங்க மோகம் தற்போது ஒரு புதிய புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும் சாமானிய மக்களால் வாங்கும் அளவுக்கு இன்னும் வரவில்லை, இதனால் மக்கள் தங்களின் கையில் இருக்கும் பணத்தை நேரடியாகச் செலவழித்துப் புதிய தங்க நகைகளை வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர்.

அதற்குப் பதிலாக, தங்களின் வீடுகளில் உள்ள பழைய தங்க நகைகளைக் கொடுத்து, அதற்கு நிகராகப் புதிய வடிவமைப்புகளில் நகைகளை மாற்றிக்கொள்ளும் (Old Gold Exchange) ஒரு புதிய டிரெண்ட் தற்போது நகைக்கடைகளில் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பழைய தங்க நகைகளை மாற்றி வர்த்தகம் செய்யும் முறை முந்தைய ஆண்டை விட தற்போது 60 சதவீதம் வரை அதிரடியாக உயர்ந்துள்ளதாக தெரிகிறது.
15% வரியால் புதிய தங்கம் நுகர்வு 70 சதவீதம் சரிவு
இந்தியாவின் முன்னணி நகைக்கடை நிறுவனங்களில் தற்போது நடக்கும் ஒட்டுமொத்தத் தங்க விற்பனையில், பாதியளவு விற்பனை இந்த பழைய நகை மாற்றுத் திட்டங்கள் மூலமாகவே நடக்கிறது. இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னணியில் மத்திய அரசின் ஒரு மிக முக்கியப் பொருளாதார நடவடிக்கை உள்ளது. கடந்த மாதம் மத்திய அரசு தங்கம் இறக்குமதி செய்வதற்கான வரியை (Effective Import Duty) 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிரடியாக உயர்த்தியது.
இதனைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் இருந்து இந்தியாவுக்குள் வரும் புதிய தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்தது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதைத் தடுக்கும் பொருட்டு, அவசியமில்லாத தங்க நுகர்வுகளை பொதுமக்கள் குறைத்துக்கொள்ள கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும் பொதுமக்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன் நேரடி விளைவாக, சந்தையில் புதிய தங்கத்தின் நுகர்வு சுமார் 70 சதவீதம் வரை சரிந்தாலும், பழைய தங்கத்தை மறுசுழற்சி (Recycle) செய்யும் வர்த்தகம் தற்போது 60 சதவீதம் வரை எகிறியுள்ளது.
ஜாய் ஆலுக்காஸ்
இந்தியாவின் முன்னணி நகைக்கடை குழுமங்களில் ஒன்றான 'ஜாய் ஆலுக்காஸ்' (Joyalukkas) நிறுவனத்தின் தலைவர் ஜாய் ஆலுக்காஸ் தற்போதைய சந்தை நிலவரம் குறித்து ஒரு மிக முக்கியப் புள்ளிவிவரத்தைப் பகிர்ந்துள்ளார். பிரதமரின் தங்கம் இறக்குமதி கட்டுப்பாட்டுக்கு முன்பாக, தங்களின் நிறுவனத்தில் பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டத்தின் மூலம் 40 முதல் 45 சதவீத விற்பனை மட்டுமே நடந்து வந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தற்போதைய புதிய வரி விதிப்பு மற்றும் சர்வதேசப் பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு, தங்களின் ஒட்டுமொத்த விற்பனையில் இந்த பழைய தங்க மாற்றுத் திட்டத்தின் பங்களிப்பு 65 சதவீதமாக அதிரடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், முகூர்த்த நாட்களில் தங்களின் மொத்த வர்த்தகத்தில் 70 சதவீதம் வரை பழைய நகைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகவே நடப்பதாக அவர் கூறியுள்ளார். உலகளாவிய பொருளாதாரச் சூழ்நிலைகள் சீரற்றதாக இருக்கும் பட்சத்தில், வரும் நாட்களிலும் இந்த பழைய தங்கம் ரீசைக்கிள் செய்யும் முறை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
நடுத்தரக் குடும்பங்கள் கையில் இருக்கும் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை வாரி இறைக்காமல், சொத்தாக இருக்கும் பழைய நகைகளை உருக்கி, புது மாடல் நகைகளுக்கு மாற்றிக் கொள்வது சாமானிய மக்களின் தங்கத்தின் மீதான மோகத்தை குறைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications