சென்னை வண்டலூரில் மாற்றுத்திறனாளி முதியவரை கடுமையாக தாக்கிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
சென்னை: சென்னை வண்டலூர் அருகே பேருந்தில் ஏறிய முதியவருக்கும் நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அந்த முதியவரை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாநகர பேருந்து மேலாண்மை இயக்குநர் பிரபு சங்கர், ஓட்டுநர், நடத்துநரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகர பேருந்து ஒன்று வண்டலூர் பேருந்து நிலையத்திற்கு வந்தது. அப்போது அங்கு பாஸ் எடுத்திருந்த மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் அந்த பேருந்தில் ஏறினார்.

அப்போது அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் அமர்ந்தார். இதற்கு நடத்துநர் எதிர்ப்பு தெரிவித்து ஒருமையில் அந்த முதியவரை பேசி வேறு இருக்கையில் அமருமாறு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கு முதியவர், தன் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை பேசியதாக தெரிகிறது. அப்போது நடத்துநர், அந்த முதியவரை ஆபாசமாக, நாகூசும் வார்த்தைகளில் பேசியதாக சொல்லப்படுகிறது. இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
உடனே அந்த முதியவரின் முடியை பிடித்து இழுத்த நடத்துநர் அவரை வெளியே தள்ளிவிட்டார். அத்துடன் இறங்கி போய் முதியவரை தாக்கினார், பதிலுக்கு முதியவரும் கடுமையாக போராடினார். உடனே டிரைவரும் இறங்கி வந்து அந்த முதியவரை தாக்கினார்.
இதையடுத்து அந்த பேருந்தில் பயணம் செய்த சிலர் வந்து தடுத்து நிறுத்தினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் நடத்துநரும் ஓட்டுநரும் Name badge அணியவில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கிறார்கள்.
மேலும் சிறிதும் மனிதாபிமானம் இல்லாமல் ஒரு இருக்கையில் அமர்ந்ததற்காக நடத்துநரும் ஓட்டுநரும் இப்படி செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து எம்டிசி இயக்குநர் பிரபு சங்கர் கூறுகையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி முடிவெடுக்கப்படும் என தெரிவித்ததாக தெரிகிறது.

விசாரணை நடத்திய நிலையில் ஓட்டுநர், நடத்துநரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் பயணிகளின் பாதுகாப்பை பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதுகுறித்து சென்னை மாநகர பேருந்து எனும் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்த சம்பவமானது இன்று காலை தடம் எண்: 70C வழித்தடத்தில் சென்னை, கிளாம்பாகத்திலிருந்து புறப்பட்டு கோயம்பேடு செல்லும் வழியில் வண்டலூர் கேட் அருகே நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications