பழைய ஓய்வூதியத் திட்டம்.. கோபத்தில் அரசு ஊழியர்கள்! ககன்தீப்சிங் பேடி செய்தது என்ன? அரசுக்கு கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பதவிக்காலத்தில் பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்ட நிலையில், அதன் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்களை திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாட்டில் 2003&ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, அதன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் என்றழைக்கப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின்படி ஓய்வு பெற்றவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படாது என்பதால், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, 2003-ஆம் ஆண்டுக்கு முன் நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க.வும், அரசு ஊழியர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Tamil Nadu Government Old Pension Scheme Anbumani ramadoss

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில், அரசின் மோசடிக்கு எதிரான போராட்டம் நடத்துவதற்கு அரசு ஊழியர்கள் தீர்மானித்தனர்.

அவர்களின் கோபத்தை அறிந்த தமிழக அரசு, தமிழ்நாட்டில் எந்த வகையான ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிப்பதற்காக ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி 4&ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இந்தக் குழு அதன் பரிந்துரை அறிக்கையை 9 மாதங்களுக்குள் அரசிடம் தாக்கல் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குழு அறிவிக்கப்பட்டு 139 நாள்கள் நிறைவடைந்து விட்ட பிறகும் கூட, இதுவரை அக்குழு எந்தப் பணியையும் செய்ததாக தெரியவில்லை.

ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பணி வரம்புகள் அறிவிக்கப்பட்டு விட்டதாக நிதித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். எனினும், பணி வரம்புகள் இன்று வரை மக்களின் பார்வைக்கு வைக்கப் படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா? அல்லது வேறு வகையான திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமா? என்பதை சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களுடன் விவாதித்து தான் முடிவெடுக்க முடியும். ஆனால், அதற்கான கலந்தாய்வுக் கூட்டங்கள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை. குழுவின் உறுப்பினர்களாக இருக்கும் மூன்று அதிகாரிகளும் இதுவரை ஒன்று கூடி தங்களுக்கான திட்டத்தின் நோக்கம் குறித்து விவாதித்தார்களா? என்பது கூட தெரியவில்லை.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைப்பதற்காக குழு அமைப்பதே காலம் கடத்தும் செயல்தான் என்பதை கடந்த பிப்ரவரி மாதமே கூறியிருந்தேன். பத்தாண்டுகளுக்கு முன்பே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த 2015&16ஆம் ஆண்டுகளில் தீவிரமடைந்த நிலையில், 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருந்ததைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் இ.ஆ.ப. அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு ஒன்றை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்தார்.

அக்குழு எந்த பணியையும் செய்யாத நிலையில், 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த இஆப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் இன்னொரு குழுவை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்தார். அந்தக் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று தாக்கல் செய்து விட்ட நிலையில், திமுக அரசுக்கு மனம் இருந்தால் அதன் அறிக்கையையே செயல்படுத்தியிருக்கலாம். அதை விடுத்து புதிய குழுவை அமைத்ததே தவறு எனும் போது, அந்தக் குழுவும் பணி செய்யாமல் காலம் தாழ்த்துவது அப்பட்டமான ஏமாற்று வேலை.

தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களில் 6 லட்சத்து 24,140 பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தான் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மொத்த பணியாளர்களில் 90%க்கும் அதிகமாகும். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து இதுவரை ஓய்வு பெற்ற 49,912 பேருக்கு சராசரியாக ரூ.10 லட்சம் வீதம் ரூ.4381 கோடி வழங்கப்பட்டதைத் தவிர வேறு எந்த பயன்களும் அவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அவர்கள் வாழ்வாதாரம் இன்றி தான் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அதேநிலை மீதமுள்ள 6.24 லட்சம் பேருக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை விட மிகவும் மோசமான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் தான். தமிழக அரசுக்கு மனமிருந்தால், அங்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப் படுகிறது என்பதை ஒரு வாரத்தில் அறிந்து தமிழகத்திலும் செயல்படுத்த முடியும். ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் மனம் அரசு ஊழியர்களை ஏமாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது.

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களை இனியும் ஏமாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால், தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுகவை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும், மக்களும் ஏமாற்றுவது உறுதி." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+