யார் காலில் விழலாம்? ரஜினி சொன்ன “அந்த” 3 பேர்.. யோகி பெயர் இருக்கா? டிரெண்டாகும் பழைய வீடியோ
சென்னை: உத்தரப்பிரதேசம் சென்ற நடிகர் ரஜினிகாந்த் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது விவாதப் பொருளாகி இருக்கும் நிலையில் யார் காலில் எல்லாம் விழலாம் என நடிகர் ரஜினிகாந்த் பேசிய பழைய வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.
ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாக இமயமலை சென்ற அவர், அந்த பயணத்தை முடித்துக் கொண்டு ஜார்க்கண்ட் சென்றார். ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் ஆளுநரும் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனை நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று சந்தித்தார்.

அதை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்துக்கு நேற்று முந்தினம் சென்ற ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்தபோது, ஜெயிலர் படத்தை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் பார்ப்பேன் என்று கூறினார். ஆனால் ஜெயிலர் படத்தை ரஜினியுடன் பார்க்க யோகி ஆதித்யநாத் விரும்பவில்லை என்று செய்திகள் வெளியாகின.
அவருக்கு மாற்றாக அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா ரஜினிகாந்துடன் திரைப்படத்தை பார்த்தார். அவரும் முழு திரைப்படத்தை பார்க்காமல் அங்கிருந்து பாதியிலேயே புறப்பட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று இரவு ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் லக்னோவில் உள்ள யோகி ஆதித்யநாத் வீட்டுக்கு சென்றார்.
யோகி ஆதித்யநாத் ரஜினியை வரவேற்க வீட்டு வாசலுக்கு வந்தார். காரில் இருந்து கீழே இறங்கியது ரஜினிகாந்த் வேகமாக சென்று யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இந்த வீடியோ வெளியாகி பல்வேறு விவாதங்களை கிளப்பி இருக்கிறது. பலரும் இதுபற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசியல்வாதியாக தற்போது அறியப்பட்டாலும், அவரை இந்து மத துறவியாகவே ஆன்மீகவாதிகள் பார்ப்பதாகவும், கோரக்நாத் மடத்தின் தலைமை மடாதிபதியாக உள்ள அவரது காலில் வயது வித்தியாசம் இன்றி பக்தர்கள் விழுவதை போன்றே ரஜினிகாந்த் விழுந்து இருக்கிறார் எனவும் பாஜக ஆதரவாளர்கள் கருத்திட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள் முன் உரையாற்றும்போது காலில் விழுவது பற்றி பேசிய வீடியோ தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் ரஜினி, "காலில் விழுந்தது என்று சொல்கிறார்கள் இல்லையா? 3 பேரின் காலில் விழுவோம்.
அது கடவுள், தாய், தந்தை. உயிர் கொடுத்த கடவுள். அந்த உயிருக்கு உயிரூட்டி சாப்பாடு ஊட்டி இந்த உடம்பை கொடுத்த தாய், தந்தை. இந்த உடம்பில்தான் நாம் எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறோம். அந்த உடம்பு இல்லை என்றால் எதுவுமே இல்லை." என்று பேசினார். இந்த வீடியோவை பகிர்ந்து ஊருக்கு மட்டும்தான் உபதேசமா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications