P.Susheela: "‘மலர்ந்தும் மலராத’ பாடலில் நீ விசும்பியபோது .." பி.சுசீலாவுக்கு வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து!
சென்னை: பழம்பெரும் பாடகி பி.சுசீலாவின் பிறந்த தினமான இன்று கவிப்பேரரசு வைரமுத்து கவிதை நடையில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பி.சுசீலா பாடிய பாடல் வரிகளை பயன்படுத்தி அவர் கவிதையை எழுதியுள்ளார்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தலைக்கு மேலிருந்த வானம்
தொலைந்துபோன பால்ய வயதில்
எங்கிருந்தோ விழுந்த
அமிர்த தாரை உன்குரல்
10வயதில் நான் சுகித்த
மனிதக் குயிலின் மதுரம்
துடைத்துவைத்த
நட்சத்திரங்களுக்குத்
தூக்கிச் சென்றது உனதுகுரல்
'மலர்ந்தும் மலராத' பாடலில்
நீ விசும்பியபோது
விசும்பியது விசும்பு
'சிட்டுக்குருவி முத்தம்
கொடுத்த'போது
மீசை முளைக்காத வயதில்
ஆசை முளைத்தது
'கங்கைக்கரைத் தோட்ட'த்தில்
கரைந்தபோது
ஒரு நாத்திகன் கடவுளானான்
'சொன்னது நீதானா'வென
விம்மியபோது
கண்ணீரின் ருசி
உப்பெனக் கண்டது உதடு
கருணையின் கண்ணீரை
தாய்மையின் தாய்ப்பாலை
காதலின் வேர்களை
சிருங்காரத்தின் நுனிகளை
அசைத்துப் பார்த்தது
உனது கானம்
அத்தர் பூசியவன்
அது எந்தநாட்டு ரோஜாவென
மறந்துபோவது மாதிரி,
இசைத்தவனையும்
எழுதியவனையும்
மறக்கடித்து விடுகிறது உன்பாடல்
தாய்மொழியின்
சௌந்தர்யங்களையெல்லாம்
சொல்லிக்கொடுத்த
சுசீலா தேவி
நீ இருக்கிறாய் என்பதால்
இருக்கிறது இசை
என்னவொரு சாபம்!
புதிய தலைமுறைக்குத்
தெரியவில்லை உன்னை
போகட்டும்;
செவிசெத்த சமூகத்தை
மன்னிப்பதே மரியாதை தாயே!
மந்திரத் தமிழ் வளர்த்த
சுந்தரத் தெலுங்கே!
இந்தப் பிறந்தநாளில்
உலகில் பிறக்கும்
ஒவ்வொரு பூவும்
உன் சிரசு சேரட்டும்
இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.
தலைக்கு மேலிருந்த வானம்
— வைரமுத்து (@Vairamuthu) November 13, 2025
தொலைந்துபோன பால்யவயதில்
எங்கிருந்தோ விழுந்த
அமிர்த தாரை உன்குரல்
10வயதில் நான் சுகித்த
மனிதக் குயிலின் மதுரம்
துடைத்துவைத்த
நட்சத்திரங்களுக்குத்
தூக்கிச் சென்றது உனதுகுரல்
‘மலர்ந்தும் மலராத’ பாடலில்
நீ விசும்பியபோது
விசும்பியது விசும்பு
‘சிட்டுக்குருவி… pic.twitter.com/9nnfdxjwmY
பி.சுசீலா... புலப்பாக்க சுசீலா என அழைக்கப்பட்டவர். அவருக்கு தற்போது 89 வயதாகிறது. இசைக்குயில், மெல்லிசை அரசி என அழைக்கப்பட்ட அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். கான கோகிலா, கான சரஸ்வதி என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.
வசந்தகுமாரி, ஜிக்கி போன்ற புகழ்பெற்ற பெண் பாடகர்களின் ஆதிக்கம் இருந்த நிலையில், "கணவனே கண் கண்ட தெய்வம்" என்ற படத்தில் "எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும், உன்னைக் கண் தேடுதே.. " பாடலை பாடியதால் பி.சுசீலாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. 72 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தனது சொந்த பாடலான "ரக்ஷ ரக்ஷ ஜெகன்மாதாவுக்கு தனது குரலை வழங்குவதன் மூலம் சுசீலா மீண்டும் வந்து, அமலா பால் நடித்த ஆதாய் படத்திற்கான தனிப்பாடலாக வெளியிடப்பட்டது.
தமிழில் மட்டும் அவர் 6000-க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை பாடியுள்ளார். 1960களில் 6 மொழிகளில் 17,695 பாடல்களை சுசீலா பாடியமைக்காக கின்னஸ் சாதனை படைத்தார்.












Click it and Unblock the Notifications