வைகோ மகனுக்கு ராஜகண்ணப்பன் தந்த உறுதி! உடனே அதிகாரிகளுக்கு பறந்த ஆர்டர்!
சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வைத்த கோரிக்கை மீது, ஆன் தி ஸ்பாட்டில் அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.
தாம் எதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்தேன் என்பது குறித்தும் என்ன கோரிக்கை வைத்தேன் என்பது பற்றியும் துரை வைகோ கூறியதாவது:

''அண்ணன் ஆர்.எஸ். ராஜகண்ணப்பனை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் என்னை சந்தித்தனர். அப்போது கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த குளறுபடியால், தமிழகம் முழுவதும் உள்ள ஊராளிக் கவுண்டர், வேட்டுவக் கவுண்டர், பிறமலைக் கள்ளர், மறவர், அம்பலகாரார், வலையர், தொட்டிய நாயக்கர், போயர், குறவர் உள்ளிட்ட சீர்மரபினரான 68 சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும், மத்திய அரசு சலுகைகளைப் பெறுவதற்கு 'சீர்மரபு பழங்குடியினர்' DNTs (Denotified Tribes) எனவும், மாநில அரசு சலுகைகளைப் பெறுவதற்கு 'சீர்மரபு வகுப்பினர்' DNCs (Denotified communities) எனவும் 'இரட்டை சாதிச்சான்றிதழ்' வழங்கும் முறை உள்ளது.
எனவே தமிழகம் முழுவதும் உள்ள இந்த 68 சமூகத்தவர்கள், சீர்மரபு பழங்குடியினர் (DNTs) என ஒற்றை சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெயசீலன் தமிழ்நாடு சீர் மரபினர் நல சங்க நிர்வாகிகளை என்னிடம் அழைத்து வந்திருந்தார். அவர்களுடன் அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் அவர்களை சந்தித்து தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்க நிர்வாகிகளின் கோரிக்கை பற்றி விரிவாக எடுத்து கூறினேன்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் உடனடியாக அதிகாரிகளை அழைத்து இந்த கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்றதுடன் முதல்வர் இது சம்பந்தமாக ஏற்கனவே தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்ததையும் நினைவு கூர்ந்தார்.'' இவ்வாறு துரை வைகோ தெரிவித்துள்ளார்.
தன்னிடம் பிரச்சனையை தீர்த்து வைக்குமாறும், கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறும் சந்திக்க வருபவர்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமே அழைத்துச் செல்லும் வழக்கம் உடையவர் துரை வைகோ என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications