‘நீட்’ தேர்வு ரத்து கோரி சென்னையில் 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த நபர் மயக்கம் – உடல்நலக்குறைவு
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியில் கடந்த 1ம் தேதி உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது. இந்த போராட்டம் இன்று 6வது நாளை எட்டிய நிலையில் ரவி என்பவர் மயக்கமடைந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கேஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு உள்ளது. திமுக, அதிமுக, ஆளும் தவெக உள்பட பெரும்பாலான கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராக உள்ளன. தமிழகத்துககு நீட் விலக்கு அளிக்க வேண்டும். 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு கேட்கவில்லை.
நேற்றைய பட்ஜெட்டில் கூட தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று கூறினார்.
இதற்கிடையே தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டம் கடந்த 1ம் தேதி தொடங்கியது.
'நீட் எதிர்ப்பு கூட்டு இயக்கம்' சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த உண்ணாவிரதத்தில் 10க்கும் அதிகமானவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த உண்ணாவிரத போராட்டம் இன்று 6வது நாளை எட்டியுள்ளது. இதற்கிடையே தான் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த ரவி என்பவர் இன்று காலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு நடுவே திடீரென்று ரவி மயங்கினார். வாந்தியும் எடுத்தார். இந்த உடல்நல பிரச்சனையை தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக கேஎம்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
