ஃபுல் போர்சில் ஸ்டாலின்.. உடனே ஆன்லைன் ரம்மிக்கு தடை! அரசிதழில் வெளியிடப்படும் என அதிரடி அறிவிப்பு
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து இருக்கும் நிலையில் உடனே அந்த மசோதா தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து நிறைவேற்றிய அவசர மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதன் காரணாமாக அந்த மசோதா காலவதியானது. அதன் பிறகும் 20 க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிலையில் ஆளுநர் ரவி கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசின் அவசர சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார். இந்த நிலையில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தமிழ்நாடு அரசு மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் ரவி இதற்கும் ஒப்புதல் தராத ஆளுநர் ஒரு மாதமாக காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில், நிலுவையில் உள்ள மசோதாக்கள் எல்லாம், நாகரிகமாக நிராகரிக்கப்பட்டவை என்றே பொருள் தரும் ஆளுநர் என்று சில நாட்களுக்கு முன்பு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில், இன்று காலை தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் தொடர்பாக தனித் தீர்மானத்தை அரசு கொண்டு வந்தது. அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திடும் வகையில், கால நிர்ணயம் செய்ய வகை செய்யும் அந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் மாலை ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்து இருக்கிறார்.
இந்த நிலையில் சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தின் இறுதியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இன்று காலை நாம் நிறைவேற்றி அனுப்பிய அரசியலமைப்பு தனித்தீர்மானத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநர் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, இதனால் தமிழ்நாட்டின் நிர்வாக நலனும், தமிழ்நாட்டின் இளைஞர்களின் எதிர்காலமும் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளது என்பதையும் எடுத்துக்காட்டி இருந்தோம்.

மேலும் பொதுவெளியில் ஆளுநர் தெரிவித்து வரும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்தும் நாம் இங்கே குறிப்பிட்டு இருந்தோம். இந்த சூழ்நிலையில் இந்த மாமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் இரு நல்விளைவாக இன்று மாலை ஆளுநர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து உள்ளார் என்ற செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மேலும் இந்த சட்டமானது இன்றே தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக இந்த அவைக்கு தெரிவித்து அவைகிறேன்." என்றார்.












Click it and Unblock the Notifications