காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்!
சென்னை: தமிழ்நாட்டில் முதன்முதலாக திமுக ஆட்சியைப் பிடிப்பதற்காக 11 லட்சம் ரூபாய் திரள் நிதியைத் திரட்டி கொடுத்தார் மு.கருணாநிதி. ஆகவே அவருக்குக் கட்சியில் செல்வாக்கு கூடியது. அதன் விளைவாக இரண்டாம் கட்டத் தலைவர்களின் பகையைக் கருணாநிதி சம்பாதிக்க வேண்டி இருந்தது.
இந்தியா விடுதலை பெறும்போது அண்ணா 37 வயது நிரம்பிய இளைஞர். அவர் திமுகவைத் தோற்றுவித்தபோது அவருக்கு வயது 40. அவர் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராகச் சட்டசபைக்குள் அடியெடுத்து வைத்தபோது 48 வயது. அவர் முதல் அமைச்சராக 1967இல் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபோது 58 வயது.

திமுகவை படிப்படியாக அவர் வளர்த்து வந்தார். அதற்காக காமராஜர் காலத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனமாகிவிட்டது என்று கூறமுடியாது. 1952 தேர்தலில் காங்கிரஸ் 34.5% வாக்குகளைப் பெற்றது. 57இல் 45.3% பெற்று மேலும் கட்சி வளர்ந்தது. 62இல் 46.1% வாக்கு வங்கியைக் காங்கிரஸ் பெற்றிருந்தது. திமுக 19662 தேர்தலில் 27% வாக்குகளையே பெற்றது.
காங்கிரசின் வளர்ச்சி
காங்கிரஸ் வீழ்ச்சிக்கு திமுகவின் வளர்ச்சி மட்டும் காரணமல்ல. மாநிலக் கட்சிகளின் கூட்டணியும் மிகப் பிரதானமான ஒரு காரணம். காமராஜரை ஆதரிப்பதன் மூலம் பிராமணரல்லாதவர்களின் எண்ணிக்கையை அமைச்சரவையில் கூட்ட முடியும் என பெரியார் நம்பினார். 1952இல் ராஜாஜி ஆட்சியில் அமைச்சரவையில் உயர்சாதியினரின் எண்ணிக்கை 2 ஆக இருந்தது. பிற்படுத்தப்பட்டவர்களின் இடம் 3ஆக இருந்தது. காமராஜர் ஆட்சிக்கு வந்தபோதும் இதே நிலைதான் நீடித்தது. 1967இல் அண்ணா முதல்வர் நாற்காலியில் அமர்ந்த காலத்திலும் இந்தச் சதவீதம் உயரவில்லை என்பதே நிஜம்.
கருணாநிதி திரட்டிய நிதி
காங்கிரஸ் ஆட்சியில்தான் முதன்முதலாக எஸ்.எஸ்.எல்.சி வரை அனைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது. 1921இல் நீதிக் கட்சி ஆட்சியில் சென்னை மாநகராட்சி உட்பட்ட ஒரு பள்ளியில்தான் சத்துணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், காமராஜ் சிறுவனாக இருந்த போது விருதுப்பட்டி படித்த சத்திரிய வித்யாசாலா பள்ளியில் 'பிடி அரிசிப் பள்ளிக்கூடம்' என அடைமொழி போட்டு அழைக்கும் விதமாகக் குழந்தைகளுக்கு இலவச சாப்பாடு வழங்கப்பட்டது. முழு சாப்பாடு அல்ல; பிடி அரிசி உணவு வழங்கப்பட்டது.
காமராஜரின் காங்கிரஸ் ஆட்சியில்தான் பிள்ளைகளுக்கு மதிய சாப்பாடு வழங்கப்பட்டது. கல்வியிலும் அரசு வேலை வாய்ப்பிலும் 1951 காங். ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 25% இடஒதுக்கீடும் வழங்கப்பட்டது. மதுவிலக்கு அமலிலிருந்ததும் காங் ஆட்சியில்தான்.
தமிழ்நாட்டின் முதல்வராக அண்ணாவை உட்கார வைக்க அவரது தொண்டர்கள் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாகக் காங்கிரஸைத் தாக்கி எழுதினர். அதில் முன்னணியில் நின்றவர் கருணாநிதி. காமராஜரையும் அவரை ஆதரித்த பெரியாரையும் விமர்சித்து கார்ட்டூன்களை அச்சேற்றினார். அதில் காமராஜருக்குப் புடவைக் கட்டி விடுவதைப்போன்ற கார்ட்டூன் கொந்தளிப்பை உண்டாக்கியது. காமராஜர் உள்ளிட்ட அவரது கட்சியின் மூத்த தலைவர்களைக் கழுவில் ஏற்றுவதைப் போன்று கார்ட்டூன் போட்டார் கருணாநிதி.
கருத்தியல் ரீதியாகப் பத்திரிகையில் சமர் நடத்திய அவர், கட்சிக்காக நிதி திரட்டுவதிலும் முதல் ஆளாக நின்றார். 1965இல் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வர உள்ள 1967 சட்டசபைத் தேர்தலுக்காக 10 லட்சம் நிதி திரட்டப்போவதாக அறிவித்தார். அவரது சகாக்கள் இதைக் கேட்டு கிலி பிடித்துப்போய் நின்றனர். கழகத்திற்கு திரள் நிதி திரட்டுவதில் புதிய உத்தியைச் செய்தார் மு.கருணாநிதி.
தேர்தல் நிதிக்காக காங் ஆட்சியைத் தாக்கி 'காகிதப் பூ' நாடகத்தை எழுதி, அதில் அவரே நடிக்கவும் செய்தார். மாநிலம் முழுக்க நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதன்மூலம் 11 லட்சம் வசூலானது. வாக்குக் கொடுத்ததை விடக் கூடுதலாக 1 லட்சம் சேர்ந்து கட்சியின் நிறுவனர் அண்ணா கையில் ஒப்படைத்தார்.
அண்ணா வெளிநாடு பயணம்
இந்தக் காலகட்டத்தில் காமராஜர் தன் கட்சிக்கு போஸ்டர் ஒட்டுபவர்களுக்குக் காசு கூட கொடுக்க முடியாத அளவுக்கு நிதியில்லாமல் தவித்தார் என எழுதியுள்ளார் அவரது ஆதரவாளர் முருக தனுஷ்கோடி. இதனால், அண்ணாவின் இதயம் கூடுதலான இடத்தை கருணாநிதிக்கு ஒதுக்கியது. அதன் விளைவாக இரண்டாம் கட்டத் தலைவர்களின் பகையைக் கருணாநிதி சம்பாதிக்க வேண்டி இருந்தது.
முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணா 1968இல் வெளிநாட்டுக்குப் பிரயாணம் செய்தார். அவரது தனிச் செயலாளர் சொக்கலிங்கம் ஐ.ஏ.எஸ் உடன் பயணித்தார். அண்ணாவின் விமானம் நடு இரவில் பஹ்ரைன் போய் தரையிறங்கியது. அந்த நேரத்திலும் நூற்றுக்கணக்கான மக்கள் அவரை வரவேற்றனர். பின் ரோம் புறப்பட்டார். அங்கே போப் ஆண்டவரைச் சந்தித்தார். போர்த்துக்கீசிய சிறையில் தவிக்கும் கோவாவைச் சேர்ந்த இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள் விடுவிக்க உதவுமாறுக் கோரினார்.
பின்னர் பாரீஸ் போன அவர் ரொனால்ட் மோட்டார் தொழிற்சாலை சென்று பார்வையிட்டார். அதன்பின் நயாகரா நீர் வீழ்ச்சியைப் பார்வையிட்டார். இந்தப் பயணத்தின் போதுதான் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, "நான் உதவி எதையும் வாங்குவதற்காக வரவில்லை. அப்படி உதவி பெறுவது என்பது பாரத நாட்டில் டெல்லி தர்பாரில் ஏகபோக உரிமையாக இருக்கிறது. நான் நட்புடன் உங்களிடம் பழகவே வந்துள்ளேன்" என்றார் அண்ணா.
தமிழ்நாட்டில் காமராஜர் மற்றும் அவரது காங்கிரஸ் ஆட்சியை ஒழித்துக் கட்டியதில் முழு வீச்சுடன் பங்காற்றிய திமுகதான் நேரு மறைவுக்குப் பின் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நிலைக்க உதவிக்கரம் நீட்டியது என்பது நகைமுரண். அப்போது நாடாளுமன்றத்தில் 25 உறுப்பினர்கள் திமுகவுக்கு இருந்தனர். நேரு மறைவுக்குப் பின் அதிகாரத்திற்கு வந்த லால் பகதூர் சாஸ்திரி தாஷ்கண்டில் ரகசியமாக முறையில் மரணமடைந்தார். காங்கிரசை எதிர்த்த ராஜாஜி, 'லால்பகதூர் சாஸ்திரி மறைவை நம்ப முடியவில்லை' என்று கண்ணீர் வடித்தார்.
அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியில் 1969இல் பிளவு உண்டானது. அப்போது மத்திய அரசு கவிழாமல் இருக்க திமுக தனது 25 உறுப்பினர்களின் ஆதரவை வழங்கியது. அதன்பொருட்டு காங்கிரஸ் ஆட்சியில் உயிர் தப்பியது.
- எழுதியவர் கடற்கரய்












Click it and Unblock the Notifications