அப்படி என்ன தப்பு செய்துவிட்டேன் என்று கேட்ட ஓபிஎஸ்.. அடுக்கி தள்ளிய அதிமுக ஆதரவாளர்!
சென்னை: நான் என்ன தவறு செய்தேன் என்று சொல்லுங்கள்.. அப்படி கூறினால், நான் அரசியலை விட்டே விலகுகிறேன் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசிய நிலையில், அதிமுக ஆதரவாளர் அவரின் தவறுகளை அடுக்கி இருக்கிறார். அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
அதிமுக உடனான கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக இணைந்துவிட்ட சூழலில், ஓபிஎஸ்-ம் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப ஓபிஎஸ் தரப்பிலும் நிபந்தனைகளின்றி இணைய தயார் என்று அறிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்க்கான அதிமுகவின் கதவுகள் மூடப்பட்டுவிட்டது என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து பாஜகவும் அவரை கண்டுகொள்ளவில்லை.

இதனால் அரசியலில் தனித்துவிடப்பட்டுள்ள ஓபிஎஸ், எந்தக் கூட்டணியில் இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளான இன்று செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் பேசுகையில், என் உழைப்பை யாரும் இம்மியளவு கூட குற்றம் சொல்ல முடியாது. அதிமுகவுக்காக எவ்வளவோ பொறுத்திருக்கிறேன்.
இந்த பன்னீசெல்வம் என்ன தவறு செய்தேன் என்று சொல்லுங்கள்.. நான் அரசியலை விட்டே விலகுகிறேன் என்ற்யு தெரிவித்தார். ஓபிஎஸ்ஸின் இந்த அறிவிப்புக்கு பின் மதுரையைச் சேர்ந்த அதிமுக ஆதரவாளர் ருசாந்தன் அடுக்கு அடுக்கான தவறுளை பட்டியலிட்டுள்ளார். அதன்படி, ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஒற்றுமையாக இருந்த கட்சியை சிதைத்தது முதல் தவறு..
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று ஊர் ஊராக பேசிவிட்டு, அந்தர் பல்டி அடித்து அம்மாவின் மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை என்று சொன்னது இரண்டாவது தவறு.. ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சைக் கேட்டு தர்மயுத்தம் நடத்தியது மூன்றாவது தவறு.. அதிமுக ஆட்சிக்கு வாழ்வா சாவா என்ற 2019 சட்டமன்ற இடைத்தேர்தலில் தனது சொந்த மாவட்டத்திற்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி பெரியகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்து தனது மகனை மட்டும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்தது நான்காவது தவறு.
2021 சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்யாமல் தான் மட்டும் ஜெயித்தால் போதும் என இருந்தது ஐந்தாவது தவறு.. அதிமுகவின் பரம எதிரியான கருணாநிதி மகனான ஸ்டாலினை வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தது ஆறாவது தவறு.. தலைமைக் கழகத்தை ரவுடிகளை கூட்டி வந்து அடித்து நொறுக்கி, அங்குள்ள பொருட்களை திருடி சென்றது ஏழாவது தவறு.
தன்னுடைய சுயநலத்திற்காக கட்சி கட்டுப்பாட்டை மீறி பொதுக்குழுவுக்கு எதிராக பல வழக்குகளை நடத்தி தொண்டர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது எட்டாவது தவறு.. ஸ்டாலின் மருமகன் சபரீசனை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நேரில் சென்று சந்தித்தது ஒன்பதாவது தவறு.. ராமநாதபுரத்தில் வாழ்வளித்த அதிமுகவை எதிர்த்தும் இரட்டை இலையை எதிர்த்தும் போட்டியிட்டது பத்தாவது தவறு..
மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என எம்எல்ஏ ஐயப்பன் பேசும்போது அதைக் கைதட்டி வரவேற்று அதை ஆமோதித்தது 11வது பெரும் தவறு.. அதிலும் உச்சபட்சமாக தற்போது மீண்டும் திமுகவின் நல்லாட்சி தான் வர வேண்டுமென நீயே பேசியிருப்பது மன்னிக்க முடியாத பெரும் 12வது தவறு..
இதேபோல பல காரணங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம்.. பெரிய குளத்தில் ரோசி டீக்கடையில் நடத்திய உங்கள் குடும்பத்திற்கு அரசியல் வாழ்வளித்த அதிமுகவையே சிதைக்க வேண்டும் என எதிரிகளுடன் கைகோர்த்து செயல்பட்டு இப்போது வந்து நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்கிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார். இது அதிமுகவினர் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications