ஓபிஎஸ் டூ இபிஎஸ்.. யூடர்ன் போட்ட முன்னாள் எம்பிக்கு புதிய பதவி கொடுத்த ஓபிஎஸ்.. டென்ஷனில் இபிஎஸ்
சென்னை: அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயனுக்கு அமைப்புச் செயலாளர் பதவியை ஓபிஎஸ் கொடுத்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிமுக பொதுக் குழுவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளது. அது வந்தால் மட்டுமே இதற்கு ஒரு என்ட்கார்டு கிடைக்கும் என தெரிகிறது.
அப்படி தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் நிச்சயம் அதிமுகவில் ஒரு சலசலப்பு ஏற்படும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ்ஸும், நான்தான் இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமியும் மாறி மாறி கூறி கொள்கிறார்கள்.

தனித்தனி அணி
இவர்கள் இருவரும் தனித்தனி அணியாக அடித்துக் கொள்வதால் நடுநிலையாக உள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும் என்ன செய்வது, யார் பக்கம் போவது என தெரியாமல் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். எனினும் சிலர் மாற்றுக் கட்சிகளில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். சிலர் அமைதியாக எந்த பக்கமும் போகாமல் வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.

நீதிமன்றம்
ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்றாலும் ஒரு முறை ஒருவருக்கு சாதகமாக தீர்ப்பு வருவதும் அதை மற்றொருவர் மேல்முறையீடு செய்வதுமாக இருக்கிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பை சொல்ல போகிறது என்பதற்காகத்தான் காத்திருக்கிறார்கள். அதற்குள் தங்கள் அணியை பலப்படுத்திக் கொள்ள இரு தரப்பினரும் போராடி வருகிறார்கள்.

மாவட்டச் செயலாளர்கள்
அந்த வகையில் தமிழகம் முழுவதும் மாவட்டச் செயலாளர்களை ஓபிஎஸ் நியமனம் செய்துள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் என அனைத்து அமைப்புகளுக்கும் நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமித்தார். அது போல் எடப்பாடி பழனிசாமியோ தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தன் பக்கம் ஆட்களை சேர்த்து வருகிறார்.

21 ஆம் தேதி மாவட்டச் செயலாளர் கூட்டம்
இந்த நிலையில் ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 21 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பண்ருட்டி ராமசந்திரன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் அணியிலிருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கும், அங்கிருந்து மீண்டும் ஓபிஎஸ் அணிக்கும் வந்த முன்னாள் எம்பி மைத்ரேயனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கி ஓ பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும்
ஏற்கெனவே ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்குவதும் சேர்ப்பதுமாகவும் புதியவர்களை நியமிப்பதும் ஏற்கெனவே இருந்தவர்களை நீக்குவதுமாக இரு தலைவர்களும் இருந்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி அணியில் 96 சதவீத பொதுக் குழு உறுப்பினர்கள் இருந்து வருகிறார்கள். ஆனால் ஓபிஎஸ் அணியில் பெரிய அளவிலான ஆதரவு அலை இல்லை. இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் தனக்கு சாதகமான நிலையை உருவாக்கி வருகிறார்.

அதிருப்தி
எடப்பாடி பழனிசாமியிடம் யாரெல்லாம் அதிருப்தியாக இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் தன் பக்கம் அணி மாறவிட்டு அவர்களுக்கு புதிய பதவிகளை கொடுத்து வருகிறார். இதற்கு பின்புலத்தில் இருந்து ஐடியா கொடுப்பது பண்ருட்டி ராமசந்திரன் என சொல்லப்படுகிறது. மேலும் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் ஓபிஎஸ்ஸும் வைத்திலிங்கமும் பதவி தருகிறார்கள் என அப்பட்டமான குற்றச்சாட்டை முன்வைத்துவிட்டு திமுகவுக்கு கோவை செல்வராஜ் சென்ற நிலையில் அவரை போன்ற வலிமையானவர்கள் யாரும் வெளியே சென்றுவிடாமல் இருக்கவும் இந்த புதிய நியமனங்கள் நடப்பதாக சொல்லப்படுகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஆகிய இரண்டையும் வைத்தே ஓபிஎஸ் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அணியினரோ தங்கள் பக்கம் இருக்கும் பெருவாரியான ஆதரவை எண்ணி தைரியமாக இருக்கிறார்கள். இதில் தீர்ப்பு வந்தால் யார் எந்த பக்கம் போவார்கள், என்னென்ன ட்விஸ்ட்கள் நடைபெறும் என்பதெல்லாம் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications