"க்ரீன் சிக்னல்.." விரைவில் அதிமுகவில் இணைக்கிறாரா சசிகலா?? வெளியான பரபரப்பு தகவல்
சென்னை: கிறிஸ்துமஸ் விழாவில் எடப்பாடியை வைத்துக் கொண்டே சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசிய ஓபிஎஸ்சின் பேச்சு தான் அதிமுகவுக்குள் பெரிய விவாதத்தை உருவாக்கி வருகிறது.
ஒவ்வொரு வருசமும் கிறிஸ்துமஸ் விழாவை அதிமுக தலைவர்கள் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இன்று சேத்துப்பட்டில் அதற்கான விழாவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் எடப்பாடி பேசியதை அடுத்து இறுதியாகப் பேசிய ஓபிஎஸ், பைபிளில் இருந்த ஒரு கதையை எடுத்துச் சொல்லி, "தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அதனை ஏற்பதே தலைமைக்கு அழகு; அது ஏற்புடையதும் கூட!" என்று இயேசு பெருமான் கூறியுள்ளார் என்றார்.

அதிர்ச்சியா? ஆச்சரியமா?
இயேசு பிரான் எத்தனையோ உபதேசங்களைக் கூறியிருக்கிறார். அதனையெல்லாம் விட்டுவிட்டு இந்த உபதேசத்தை எதற்கு அவர் கூறினார் என்று விழாவில் கலந்து கொண்ட அத்தனை தலைவர்களும் ஓபிஎஸ்சை நிமிர்ந்து பார்த்திருக்கிறார்கள். சற்று கூடுதலாகவே எடப்பாடி, ஓபிஎஸ்-ஐ ஏறிட்டுப் பார்த்துள்ளார். அந்த பார்வை அதிர்ச்சியா ? ஆச்சரியமா? என்பது போல இருந்தது என்கிறார்கள் விழாவில் கலந்து கொண்டவர்கள்.

என்ன காரணம்
ஓபிஎஸ்சின் பேச்சு, சசிகலாவை ஏற்க வேண்டும்; அதுதான் நல்ல தலைமைக்கு அழகு என்பதை எடப்பாடிக்கு உணர்த்துகிறதா? என்று ஓபிஎஸ்சுக்கு நெருக்கமான சீனியர் ஒருவரிடம் பேசினோம். நம்மிடம் சில விசயங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், "அதிமுக பிளவுபட்டு இருக்கும் வரை.. எத்தனை தேர்தல்கள் வந்தாலும் திமுகதான் ஜெயிக்குமென்பது நிதர்சனமாக இருக்கிறது. அ.ம.மு.க. கட்சி பிரிக்கும் வாக்குகள் அத்தனையும் அதிமுகவிற்கான வாக்குகள். இத்தகைய பிரிப்புகளால் திமுகவுக்குத்தான் லாபம்.

அதிமுக வாக்குவங்கி
விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. உள்ளாட்சி வார்டுகளுக்கான தேர்தலைப் பொறுத்தவரை 10 வாக்குகளில் கூட வெற்றி தோல்வி முடிவாகும். அந்த வகையில், அமமுக பிரிக்கும் ஓட்டுகள் அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். அதனால், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதுதான் அதிமுகவின் எதிர்கால அரசியலுக்கு வலிமை சேர்க்கும். தேர்தல் முடிவுகளில் அதிமுகவின் வாக்குகள் சிதறவில்லை; அதன் வாக்கு வலிமை அப்படியேதான் இருக்கிறது என்பதை நாம் நிரூபிக்கும் போதுதான் திமுக தலைமையும் அதிகார மிரட்டலை அதிமுக மீது காட்டுவதற்கு யோசிக்கும். அதனால் உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி மிக முக்கியமானது" என்று சமீபத்தில் அதிமுக சீனியர்கள் பகிர்ந்து கொண்டனர்.

எதிர்ப்பு
இதை அதிகமாக வலியுறுத்தியவர் ஓபிஎஸ். ஆக, தேர்தல் வெற்றியில் அதிமுக வலிமையாக வேண்டுமானால் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும். அந்த ஒன்றிணைதல் நடக்க வேண்டுமானால் சசிகலாவைக் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என ஓபிஎஸ், மீண்டும் ஒருமுறை சீனியர்களிடம் தனது கருத்தை வலியுறுத்தினார். ஆனால், எடப்பாடி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் மட்டுமே, வழக்கம் போல, சசிகலாவை மீண்டும் சேர்த்தால் தினகரன் உள்ளே வருவார். சசிகலாவைக்கூட ஏற்கலாம். தினகரன் நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப்படைப்பார்; ஒருமையில் பேசுவார் என்பதையெல்லாம் மறந்து விட்டீர்களா? என்று பழைய சங்கதிகளையே சொல்லி எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

ஆதங்கம்
அதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர், அப்படியானால் ஒவ்வொரு தேர்தலிலும் தோத்து தோத்து எழுந்திருப்போமா? அதுதான் கட்சியை வலிமைப்படுத்தற அழகா? இன்றைக்கு எல்லோருமே ஏதேனும் ஒரு வகையில் ஸ்ட்ராங்காதான் இருக்கிறோம். பழைய நாட்கள் படி நாம் ஒன்றும் அடிமையாக இருக்கப் போவதில்லை. தினகரனை மட்டும் கட்சியில் சேர்க்க முடியாது எனச் சொல்லுவோம். அதை சசிகலா ஏற்கிறாரா எனப் பார்க்கலாமே? தினகரனுக்காக சசிகலாவை ஏன் உதற வேண்டும்? என்றெல்லாம் நிறையப் பேசினார். ஆனாலும் எடப்பாடி தரப்பில் ஏற்கவில்லை. இந்த ஆதங்கம் தான் , ஓபிஎஸ்சை அப்படிப் பேச வைத்தது" என்று சுட்டிக்காட்டினார்.

கூட்டணி கணக்கு
இதற்கிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கணிசமான வெற்றியை பாஜக அடைய வேண்டும் என எதிர்பார்க்கிறது. அதிமுக கூட்டணி வலிமையாக இருந்தால் அதனுடன் கூட்டணி வைக்கும் பாஜக, திமுகவை எதிர்கொள்ள வசதியாக இருக்கும் என தமிழக பாஜக கருதுகிறது. ஆனால், இப்போ இருக்கும் அதிமுகவை விட ஒன்றுபட்டு வலிமையாக இருக்கும் அதிமுகவைத்தான் தமிழக பாஜக எதிர்பார்க்கிறது. இது குறித்து டெல்லி தலைமைக்கும் தமிழக பாஜக தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

விசாரித்த டெல்லி
இதனையடுத்து, அதிமுகவில் என்னதான் நடக்கிறது? என ஓபிஎஸ்சிடம் தேசிய தலைமை விசாரித்துள்ளது. அப்போது, சசிகலா விவகாரத்தைத்தான் அதிகம் பேசியிருக்கிறார் ஓபிஎஸ். அதனைக் கேட்ட டெல்லி, சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசுங்கள் என சமிக்ஞை கொடுத்ததாகவும் அதன் பேரிலேயே இயேசு பிரான் உபதேசத்தை எடப்பாடியை வைத்துக் கொண்டே பேசினார் என்று ஒரு சங்கதி ஓடிக்கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்ல, பெங்களூர் சிறையில் இருந்த போது, சசிகலாவுக்கும் பாஜக தலைமைக்கும் பாலமாக இருந்த டெல்லியைச் சேர்ந்த தனது சோர்ஸை சமீபத்தில் தொடர்புகொண்டு புலம்பித் தீர்த்து விட்டாராம்.

புலம்பித் தள்ளிய சசிகலா
குறிப்பாக, அதிமுகவில் நான் இணைக்கப்படுவதில் டெல்லியையே நம்பியிருந்தேன். ஆனால், அவர்கள் என்னைக் கண்டுகொள்வதே இல்லை. என்னை விடவா, எடப்பாடி உங்களுக்கு நம்பிக்கையாக இருந்து விடப்போகிறார்? இல்லையே! அதிமுக பலகீனமடைவது திமுகவுக்கு பலம். திமுக வலிமையாவது பாஜகவுக்கு பலகீனம். அதனை ஏன் நினைத்துப் பார்க்க மாட்டேங்கிறது? என்கிற ரீதியில் புலம்பித்தீர்த்தாராம் சசிகலா. அந்த சோர்ஸ் எடுத்த முயற்சியில் கூட ஓபிஎஸ்சை டெல்லி கேட்டுக் கொண்டிருக்கும் என்று சசிகலா தரப்பில் இருந்து தகவல்கள் கிடைக்கிறது.

தொண்டர்கள் கருத்து
இந்த நிலையில், ஓபிஎஸ்சின் பேச்சு அதிமுகவில் மீண்டும் விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் உறுதியாக சீட் கிடைக்கும் என எண்ணுபவர்கள் அனைவரும், அதிமுக பிளவுபட்டுக் கிடப்பதை விரும்பவில்லை. அதிமுக ஜெயிக்கணும்னா அந்தம்மாவை சேர்த்துக் கொள்வதில் என்ன தவறு? எடப்பாடியிடம் பணம் ஏகப்பட்டது இருக்கு. பணத்தை வைத்து எந்த தேர்தலாக இருந்தாலும் சேலம் மாவட்டத்தில் அவருக்கான வெற்றியைப் பார்த்துக் கொள்வார். நாம் எங்கே போவது ? கட்சி வாக்குகளால் பலமாக இருந்தால் தானே லயிக்க முடியும். அதனால், சசிகலாவை ஏற்பதில் எடப்பாடி பிடிவாதம் காட்டக் கூடாது. ஓபிஎஸ் பேச்சில் தவறே இல்லை என்று விவாதித்துக் கொள்கிறார்கள் அதிமுகவின் சாதாரண தொண்டர்கள். ஓபிஎஸ்சின் ஒரு பேச்சுக்குப் பின்னால் இத்தனை சங்கதிகள் புதைந்து கிடக்கின்றன.












Click it and Unblock the Notifications