அய்யோ.. "சாத்தான் வேதம் ஓதக்கூடாது" ஓபிஎஸ்க்கு தகுதியில்லை.. கனலாய் கொதித்த சிவி சண்முகம்
சென்னை: அதிமுகவின் சட்ட விதிகள் பற்றி பேசுவதற்கு ஓ.பன்னீர் செல்வத்திற்கு தகுதியில்லை என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர், எம்.எல்.ஏக்களின் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதனால் தமிழக சபைக்கு வந்த ஓ.பன்னீர் செல்வம் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கையில் அமைந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக அணியினர், சட்டசபையை புறக்கணித்தனர். தொடர்ந்து சட்டசபையில் இன்றைய அலுவல்கள் அனைத்தும் முடிவடைந்த பின் சபாநாயகர் அப்பாவு சட்டசபை கூட்டத்தை நாளை காலை 10 மணிக்கு ஒத்திவைத்தார்.

ஓபிஎஸ் கருத்து
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் கூறுகையில், எங்களது ஜனாநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டோம். அடிப்படை தொண்டர்கள் ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம் அதிமுக சட்ட விதிகள் பலநூறு ஆண்டுகளானாலும் எந்தவித மாசும் படாமல் காக்கும் பொறுப்பில் இருக்கிறோம். தொண்டர்கள்தான் அடித்தளம், ஆணிவேர் என்று தெரிவித்தார்.

சிவி சண்முகம் பேட்டி
இதுகுறித்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், சாத்தான் வேதம் ஓதக் கூடாது. இதனை சொல்வதற்கு தகுதி வேண்டும். அந்த தகுதி ஓபிஎஸ்-க்கு இல்லை. சட்டவிதிகளை மாற்றலாமா, மாற்றினால் எம்ஜிஆரின் ஆன்மா மன்னிக்காது என்று சொல்லும் ஓபிஎஸ், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவை முடக்கினார். தொண்டனுக்கு இருக்கும் உரிமை கூட ஓபிஎஸ்-க்கு இல்லை.

ஜெ. ஆன்மா மன்னிக்காது
பராசக்தி படத்தின் வசனங்களை மனப்பாடம் செய்து வைத்திருக்கும் ஓபிஎஸ், சட்டசபையில் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசி வருகிறார். அதிமுகவின் சட்டவிதிகளை மாற்றக் கூடாது என்று சொல்லும் ஓபிஎஸ், 2017ல் பதவி லாபத்திற்காக மாற்றியவர். பொதுச்செயலாளர் பதவியை ரத்து, கட்சியில் இல்லாத ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை கொண்டு வந்தவர். ஓபிஎஸ்-ஐ எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.

ஓபிஎஸ்-க்கு தகுதியில்லை
அதிமுக தொடங்க வேண்டும் என்பதற்கான நோக்கம் திமுகவை எதிர்க்க வேண்டும், விரட்ட வேண்டும் என்பதற்காக தான். 50 ஆண்டு கால கட்சி வரலாற்றில், ஓபிஎஸ் ஒரு கரும்புள்ளி. அவருக்கு அதிமுக, எம்ஜிஆர், ஜெயலலிதா, சட்டவிதிகள் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது என்று ஆவேசமாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications