எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..சட்டசபையில் கால் வைக்காத ஓபிஎஸ்! எல்லாத்துக்கும் அதுதான் காரணம்
சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் கடும் அதிருப்தியில் இருக்கிறார் ஓபிஎஸ். இந்த நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையும் பறிக்கப்பட்டதால், சட்டசபைக்கு வராமல் இருக்கும் ஓபிஎஸ், கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு சபாநாயகர் அறையில் அமர்ந்து அதற்குப் பிறகு வெளியேறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகி வருகிறது உட்கட்சி நிகழ்வுகள்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்கினார் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம். நீதிமன்றம் வரை சென்றும் பொதுக்குழுவை நிறுத்த முடியாத நிலையில் நினைத்ததை முடித்தார் இபிஎஸ்.
பொதுக்குழுவில் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே பி முனுசாமி ஆகியோர் துணை பொது செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அவரது முன்னாள் சிஷ்யரான ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமித்தார் எடப்பாடி பழனிச்சாமி. தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று ஆர்பி உதயகுமாரும் பங்கேற்று வந்தார்.
இதனால் உற்சாகமடைந்த அவரது ஆதரவாளர்கள் மதுரை முழுக்க எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்பி உதயகுமாருக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் பிளக்ஸ் என மாஸ் காட்டினர். அதே நேரத்தில் சபாநாயகர் அப்பாவு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் தாமதம் செய்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு வரை நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் சட்டமன்ற மாண்பு படி ஓ.பன்னீர்செல்வமே எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தொடர்வதாக அறிவித்ததோடு எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
அதற்குப் பிறகு 2024 பிப்ரவரி மாதத்தில் சட்டசபை கூடிய நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக பேச வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் பன்னீர்செல்வம் உட்காருவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, புதிதாக எதிர்க்கட்சி துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்பி உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியும் பேசினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதை அடுத்து அடுத்த சில நாட்களில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்பி உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் பன்னீர்செல்வம் அதற்குப் பிறகு சட்டமன்ற கூட்டத் தொடரில் அமர்வதில்லை. கடந்த பிப்ரவரி மாதம் ஓபிஎஸ்-க்கு இருக்கை மாற்றப்பட்ட நிலையில் பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் சட்டப்பேரவை வளாகத்திற்கு உள்ளே வருவதில்லை எனக் கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதத்தில் ஒரே ஒரு நாள் மட்டுமே அவைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று சட்டப்பேரவைக்கு ஓபிஎஸ் வரவில்லை. அதே நேரத்தில் இன்று சட்டசபை வளாகத்திற்கு வந்த அவர் அவைக்கு உள்ளே செல்லாமல் சபாநாயகர் அறையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்ததாக கூறப்படுகிறது. ஜூன் மாதத்தில் சட்டப்பேரவை கூட்டம் 21 நாட்கள் நடைபெற்ற நிலையில், அதில் ஒரு நாள் மட்டுமே ஓபிஎஸ் அவைக்கு வந்திருந்தார்.
சில நாட்கள் வருகை பதிவேட்டில் மட்டும் கையொப்பமிட்டு விட்டு அவைக்கு உள்ளே செல்லாமல் வெளியே சென்றிருந்தார். இந்த நிலையில் இன்றும் அதே போல கையெழுத்து போட்டுவிட்டு சபாநாயகர் அறைக்கு சென்ற அவர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தனது அலுவலகத்திற்குச் சென்றதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications