திமுகவில் இணைந்தது வெட்கக்கேடு.. சுயநலத்தின் மொத்த உருவமே ஓபிஎஸ் தான்.. கேபி முனுசாமி அட்டாக்!
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பது வெட்கக்கேடான செயல் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி விமர்சித்துள்ளார். சுயநலத்தின் மொத்த உருவமாக ஓபிஎஸ் இருப்பதாக கூறிய கேபி முனுசாமி, வாழ்வளித்த அதிமுகவை மறந்து சுயநலம் காரணமாக திமுகவில் இணைந்துவிட்டதாகவும் சாடியுள்ளார்.
அதிமுக சார்பாக 3 முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் இன்று திமுகவில் இணைந்திருக்கிறார். இதனால் தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூக வாக்குகள் திமுக பக்கம் கணிசமாக செல்லும் என்று கருதப்படுகிறது. அதேபோல் அரசியல் ரீதியாக முதல்வர் ஸ்டாலினின் இமேஜ் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றுள்ளது.

இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகி கேபி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக ஆட்சியில் இருந்த போது 3 முறை முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ். தனக்கு வாழ்வு அளித்த இயக்கத்தை மறந்து சுயநலமே என் வாழ்க்கை என்பதை நிரூபிக்கும் வகையில் திமுகவில் இணைந்துள்ளார்.
தீயசக்தி திமுகவில் இணைந்திருப்பது வெட்கக்கேடான செயல். அவரை ஒரு மனிதனாக பார்ப்பதற்கே வெட்கமாக உள்ளது. 3 முறை முதல்வராக இருந்தது கசப்பான நினைவா? சுயநலத்தின் மொத்த உருவமாக ஓபிஎஸ் இருக்கிறார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், மன்னிப்பு கடிதம் கொடுத்து கட்சியில் இணையுங்கள் என்று கேட்க வேண்டும். அதுதான் அதிமுகவில் இருக்கும் நடைமுறை.
ஆனால் ஓபிஎஸ் கட்சியை களங்கப்படுத்துகிற வகையில், தலைமைக் கழகத்தையே காலால் உதைத்தவர். மீண்டும் கட்சியில் இணைய வேண்டுமென்றால், மன்னிப்பு கேட்டு பொதுச்செயலாளருக்கு கடிதம் கொடுத்திருக்க வேண்டும். ஓபிஎஸ் அந்த கடிதத்தை கொடுக்கவில்லையா? எப்படி இணைப்பு இணைப்பு என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.
தென் மாவட்டங்களில் அதிமுக வலிமையாக உள்ளது. தென் மாவட்டங்கள் மூலமாக தான் அதிமுக வளர்ச்சி அடைந்தது. அப்படிபட்ட தென் மாவட்ட மக்கள் அதிமுகவுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எடப்பாடி பழனிசாமியை சர்வாதிகாரி என்று சொல்லும் ஓபிஎஸ், எங்காவது பணியாற்றினாரா? அவர் சொந்த தொகுதியிலேயே வெற்றிபெற போராடிக் கொண்டிருந்தார் என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications