ஓபிஎஸ்க்கு ஓகே சொன்ன எடப்பாடி..டீலை சத்தமில்லாமல் முடித்த நயினார்! அப்போ டிடிவி தினகரன்? அதகள அதிமுக
சென்னை: அதிமுகவிலும் அந்தக் கட்சி தலைமை வகிக்கும் தமிழக என்.டி.ஏ கூட்டணியிலும் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது. பாஜகவுக்கு கடந்த மக்களவைத் தேர்தலில் பக்கபலமாக இருந்த ஓபிஎஸ், டிடிவி, எடப்பாடியால் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் அமித்ஷா, மோடி வருகையை முன்னிட்டு கூட்டணி கட்சித் தலைவர்களை ஒரே மேடையில் ஏற்ற நயினார் நாகேந்திரன் திட்டமிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி ஓகே சொன்ன நிலையில் டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்க்க முடியாது என திட்டவட்டமாகக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
2026 தேர்தலை ஒட்டி தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை திமுக முன்னெடுத்து பொதுக்கூட்டம், மாநாடு என தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. இதேபோல அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட பாதி சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டார்.
தவெக விஜய், பாமக அன்புமணி, தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மிகப்பெரிய கூட்டணி பலத்துடன் திமுக இருக்கும் நிலையில் அதற்கு எதிராகப் பலமான கூட்டணியை அமைக்க அதிமுக முயற்சித்து வருகிறது.

அதிமுக பாஜக கூட்டணி
ஆனால் உட்கட்சி விவகாரம், கூட்டணி குழப்பங்களால் அது முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் தற்போது வெளியேறி இருக்கின்றனர். தற்போதைக்கு அதிமுக, பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சிறிய கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. மேலும் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளையும் கூட்டணிக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை நடக்கிறது. பாமகவைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன. ஆனால் தேமுதிகவின் நிலைப்பாடு எதுவென்று தெரியவில்லை.
நயினார் நாகேந்திரன்
ஜனவரியில் கட்சியின் மாநாட்டுக்குப் பிறகுதான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருக்கிறார். இந்த நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அடுத்தடுத்து தமிழகம் வர இருக்கின்றனர். இன்னும் சில நாட்களில் சேலத்தில் அமித்ஷா பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம், நெல்லையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து அக்டோபர் ஒன்றாம் தேதி மதுரையில் இருந்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரச்சாரத்தையும் துவக்குகிறார்.
பாஜக கூட்டணி
பிற மாநிலங்களில் இருப்பது போல தமிழகத்திலும் பாஜக கூட்டணி வலுவாக பிரம்மாண்டமாக இருக்கிறது என்பதை காட்ட வேண்டும் என்பதற்காக பாஜக கூட்டணியில் இருக்கும் தலைவர்களை ஒன்றாக மேடையில் தோன்ற வைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. ஆனால் கூட்டணியில் இருந்த முக்கிய முகங்களான ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது.
மோடி அமித்ஷா நிகழ்ச்சி
இந்த நிலையில் சேலத்தில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் சேலம் அமித்ஷா நிகழ்ச்சி, நெல்லை மோடியின் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்களை ஒன்றாக பங்கேற்க வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
எடப்பாடி முடிவு
தற்போதைய சூழலில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கும் நிலையில் அவரை கூட்டணிக்குள் அனுமதிக்க எடப்பாடி சம்மதித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் தன்னை குறித்து பழைய விஷயங்களை பேசி வரும் டிடிவி தினகரன் கூட்டணிக்குள் அனுமதிக்கவே முடியாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் என்கிறார் பாஜக வட்டாரத்தினர். மேலும் டிடிவி தினகரன் கூட்டணியில் அனுமதிக்க வேண்டுமென்றால் 'வேறு' முடிவுகளை எடுக்க வேண்டி வரும் என எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications