என்.டி.ஏ கூட்டணியில் தொடர்வதா இல்லையா? நாளை அறிவிக்கிறார் ஓபிஎஸ்! அப்போ எடப்பாடி?
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது குறித்து ஓபிஎஸ் நாளை அறிவிக்கிறார். ஓபிஎஸ் நாளை மாலை செய்தியாளர்களை சந்திப்பார் என அதிமுக எம்எல்ஏ வைத்திலிங்கம் பேட்டி அளித்துள்ளார்.
2026 சட்டசபை தேர்தலையொட்டி, பாஜக - அதிமுக கூட்டணி அமைத்துள்ளன. முன்பு பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக கூறி வந்தார்.

இந்த நிலையில் ஏப்ரல் 11ஆம் தேதி சென்னையில் அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். முரண்டு பிடித்து வந்த எடப்பாடி பழனிசாமி திடீரென பாஜக உடன் கைகோர்த்தது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இணைந்த நிலையில், கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக அணியில் இடம்பெற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிலை கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்தக் கட்சிகள் அதிமுக - பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவிடம் இருந்து பாஜகவுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் இருந்து இவ்விரு கட்சிகளுக்கும் பிரித்துக் கொடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் மீண்டும் சேர்ப்பதற்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்து வருகிறார். பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இருந்து மற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டால் எடப்பாடி பழனிசாமி மறுப்பு சொல்வதற்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், இன்று, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், ஓபிஎஸ் அணி சார்பில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த கருத்து கேட்புக்கான கடிதம் வழங்கப்பட்டு மாவட்டச் செயலாளர், தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு பெறப்படுகிறது. ஓபிஎஸ், வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கருத்துக்களைப் பெற்றுள்ளனர்.
அதிமுக - பாஜக கூட்டணி உருவான பிறகு ஓபிஎஸ் அணிக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம், "அதிமுக - பாஜக இணைந்து அமைத்துள்ள என்.டி.ஏ கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது. நிர்வாகிகளுடைய கருத்துக்கள் கேட்கப்படுகிறது. நாளை முடிவு எடுக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறோமோ என்பதை நாளை செய்தியாளர்களைச் சந்தித்து ஓபிஎஸ் விளக்கம் கொடுப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்திற்கு வந்த ஓபிஎஸ் அணி சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, "அதிமுக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்கள் விருப்பம். அதிமுக கோமா நிலையில் உள்ளது. 4 பிரிவுகளாக இருப்பதால் தான் 10 தேர்தலில் தோல்வி அடைந்தோம். 2026 சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்றால் அதிமுக படுதோல்வி அடையும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications