ஆதவ் அர்ஜுனா அரசியல் செயல்பாட்டுக்கும் எங்க குடும்பத்துக்கும் சம்பந்தம் இல்லை.. மனைவி டெய்சி அறிக்கை
சென்னை: ஆதவ் அர்ஜூனா எடுக்கும் அரசியல் முடிவுகள் அவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது என்றும் அவரது அரசியல் செயல்பாடுகளை எங்கள் குடும்பத்துடன் ஒப்பிட வேண்டாம் என்று அவரது மனைவியும், லாட்டரி அதிபர் மார்ட்டின் மகளுமான டெய்சி தெரிவித்துள்ளார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மனைவியும் பிரபல லாட்டரி நிறுவன அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகளுமான டெய்சி இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "நானும் ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்க விரும்புகிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். அவரது அனைத்து தொழில் மற்றும் அரசியல் சார்ந்த முடிவுகளும் நிலைப்பாடுகளும் அவரவரின் தனிப்பட்ட தீர்மானங்கள். அவை எங்கள் குடும்பத்துடன் எந்த தொடர்பும் கொண்டவை அல்ல.
எங்கள் வாழ்க்கை குறித்து பரப்பப்படும் அனைத்து தவறான தகவல்கள், ஊகங்கள், வதந்திகள் ஆகியவற்றுக்கு முடிவு கட்டுவதற்காகவே இந்த அறிவிப்பு. நாங்கள் இருவரும் தனித்துவமான பணி வாழ்க்கையையும் தனித்துவமான கருத்துகளையும் கொண்டுள்ளோம். ஒருவருக்கொருவர் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட கருத்துக்களை மதிக்கிறோம். இதற்கு மாறாக எந்தவொரு தவறான கூற்றுகளையும் நாங்கள் எதிர்க்கிறோம்.
எங்கள் இருவரின் நலனுக்காக, தொழில் மற்றும் பொது வாழ்க்கை விவகாரங்களை குடும்பத்துடன் தொடர்புபடுத்தி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என எங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரிடமும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்." என ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி தெரிவித்துள்ளார்.
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் தான் ஆதவ் அர்ஜுனா. பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு லாட்டரி மார்ட்டின் பலநூறு கோடிகள் தேர்தல் நன்கொடை அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், அவரது மருமகனான ஆதவ் அர்ஜுனா அரசியலில் குதித்தார்.
வாய்ஸ் ஆஃப் காமன் (Voice of Common) என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஆதவ் அர்ஜூனா, கடந்த சில ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு நிகழ்வுகள், கூட்டங்களை ஒருங்கிணைத்து வந்தார். அதைத்தொடர்ந்து, அவரை கட்சியில் சேர்த்து துணைப் பொதுச் செயலாளர் பதவியையும் வழங்கினார் திருமாவளவன்.
லோக்சபா தேர்தலுக்குப் பிறகு ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுகள், சர்ச்சையை ஏற்படுத்தத் தொடங்கின. ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகளுக்கு விசிக மேல்மட்டத்திலேயே எதிர்ப்புகள் எழுந்தன. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மாநாட்டில் பேசியதற்கு ஆதவ் அர்ஜுனா வரவேற்பு தெரிவித்திருந்தது இந்த மோதலை மேலும் சூடாக்கியது.

அம்பேத்கர் குறித்த புத்தக நிகழ்வு வெளியீட்டு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யையும் ஒன்றாக மேடையில் அமரவைத்து தனது நிறுவனம் ஒருங்கிணைத்த புத்தக வெளியீட்டு விழாவை நடத்த முயற்சித்தார். ஆனால், நேற்று நடந்த இந்த விழாவில் பங்கேற்பதை திருமாவளவன் தவிர்த்தார்.
அந்த விழாவில் பங்கேற்ற ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, விசிகவில் இருந்து விலகுவதாக அறிவித்த ஆதவ் அர்ஜுனா, அண்மையில் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்தார். தமிழக வெற்றிக் கழகத்தில் அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications