கொஞ்சம் நஞ்சம் இல்ல.. 700 கோடி! விடியல் பயணத் திட்டத்தில் இவ்வளவு பலனா? போக்குவரத்து கழகம் அப்டேட்!
சென்னை: தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகளிர் விடியல் பயணத் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 700.38 கோடி பயண நடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களில், 7,671 பேருந்துகளில் இந்த திட்டத்தின் கீழ் 700 கோடி முறை பெண்கள் இதுவரை பயன்பெற்றுள்ளனர்.

தமிழக அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கிய திட்டமாக, மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணித்து வருகின்றனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போதே பெண்களுக்கு மாநகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்வதற்கான திட்டத்தின் கோப்பில் கையெழுத்திட்டார்.
இதையடுத்து 2021ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி இந்தத் திட்டம் அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் வெள்ளை போர்டு பேருந்துகளிலும், கிராமப்புற அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
சமூக, பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் மற்றும் உயர்த்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்துக்கு தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்தப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் அதிகமான பேருந்துகளும் விடியல் பயணத் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் மகளிர் விடியல் பயணத் திட்டத்தில் (நேற்று) 29.05.2025 வரை தமிழ்நாடு முழுவதும் மகளிரால் 700.38 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பயணம் 7,671 பேருந்துகளில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இதுதொடர்பாக பேசுகையில், "தற்போது 700 கோடி முறை மகளிர் விடியல் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் நடைபெறாத ஒரு புரட்சித் திட்டம். மாநில திட்டக்குழு ஆய்வின் படி ஒரு மகளிருக்கு சராசரியாக 888 ரூபாய் மாதந்தோறும் சேமிப்பு கிடைக்கிறது என புள்ளி விவரம் தெரிவிக்கிறது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications