திமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்... ஓவைசி கட்சி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெறுவது தொடர்பாக தங்களது கட்சித் தலைவர் ஓவைசி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மஜ்லிஸ் கட்சியின் தமிழக தலைவர் வகீல் அகமது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி:

3-ம் அணியில் ஓவைசி கட்சி இல்லை
அசாதுதீன் ஓவைசியின் தலைமையிலான மஜ்லிஸ் கட்சியின் தமிழக பிரிவானது, திமுக கூட்டணியில் இணைவதுதான் தங்களுக்கான முதல் வாய்ப்பு என தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும் 3-வது அணியில் இணைவது தொடர்பாக சிந்திக்கவில்லை எனவும் ஓவைசி கட்சி கூறியுள்ளது. சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாகவும் ஓவைசி கட்சி தெரிவித்திருக்கிறது.

மநீமவுடன் பேச்சுவார்த்தையா?
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கிறது என்கிற செய்திகளையும் ஓவைசி கட்சி நிராகரித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் ஓவைசி கட்சி கூட்டணி அமைக்கிறது என்பது தொடர்பாக கருத்து தெரிவித்த அதன் தமிழக தலைவர் வகீல் அகமது, எங்களுடைய தலைவர் எந்த ஒரு கட்சித் தலைவருடனும் பேசவில்லை. மூன்றாவது அணியில் ஓவைசி கட்சி இணையுமா என கேள்வி கேட்டால் எங்களது முதல் பதில் இல்லை என்பதாக இருக்கும்.

திமுகவுடன் தேசிய தலைமை பேச்சு
அதனை பின்னர் பரிசீலிப்போம். எங்களுடைய தேசிய தலைமை திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. திமுகவுடன் கூட்டணி சேருவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அப்படி திமுகவுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டால் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். இஸ்லாமியர்கள் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர்; அவர்களுக்கான அரசியல் அதிகாரம் மறுக்கப்படுகிறது என்பதை எங்களது தேசிய தலைமை சுட்டிக்காட்டி இருக்கிறது.

திமுக அணியே முதல் தேர்வு
நாங்கள் தமிழகத்தில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த விரும்புகிறோம். முதலில் திமுக கூட்டணியைத்தான் தேர்வு செய்திருக்கிறோம். அது நடைமுறைக்கு வராத நிலையில்தான் அடுத்த வாய்ப்புகள் குறித்து ஆலோசிப்போம். கூட்டணி தொடர்பாக எங்களது தலைவர் (ஓவைசி) விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார் என்றார். இதனிடையே ஓவைசி கட்சி தலைவர் ஒருவர் கூறுகையில், மதவாத கட்சிகள், ஊழல் கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைக்கமாட்டோம். அந்த கூட்டணியை எங்கள் தலைவர் எதிர்க்கிறார் என்றார். இவ்வாறு தி இந்து ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications