தேர்தல் பத்திரங்கள் மூலம் காங். நிதி பெற்றது ஏன்? அது சரியா? ப.சிதம்பரம் விளக்கம்
சென்னை: பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறும் திட்டமே சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கி இருந்தது.
காங்கிரஸ் கட்சியும் இதே திட்டத்தின் மூலம் நிதி பெற்றுள்ளது. ஆனால், அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இதனை 'சட்டரீதியாகப் பெறப்படும் ஆதாய நிதி' என்று பொருள்படும் விதத்தில் விமர்சித்திருந்தார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இத்திட்டத்தை ரத்து செய்யும் என்று கூறி வந்தார். இப்போது நீதிமன்றமே அதை ரத்து செய்துள்ளது.
இத்திட்டமே தவறு எனப் பேசிவந்த காங்கிரஸ் ஏன் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியைப் பெற்றது? என்ற விமர்சனம் இப்போது முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த விமர்சனத்திற்கு ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

"இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஆங்கிலத்தில் Transparency என்று ஒரு வார்த்தை உண்டு. வெளிப்படைத்தன்மை என்பது அதன் பொருள். அதாவது வெளிப்படையாக சில விசயங்கள் மக்களுக்குத் தெரிய வேண்டும்.

ஒரு கட்சிக்குத் தேர்தல் பத்திரங்கள் மூலம் யார் யார் பணம் தருகிறார்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். அதில் ஒளிவுமறைவு இருந்தால், அது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஆகவேதான் நீதிமன்றம் இதை எதேச்சதிகாரமான திட்டம் என்று சொல்லி இருக்கிறது.
இந்தத் திட்டம் வருவதற்கு முன் பல கார்ப்பரேட் கம்பெனிகள் கருப்புப் பணத்தை அரசியல் கட்சிகளுக்கு மறைமுகமாகக் கொடுத்து வந்தது. ஆனால் , இந்தத் தேர்தல் பத்திரங்கள் என்ற திட்டம் வந்த பிறகு வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதைவைத்துக் கொடுக்கப்படும் நிதியை அறிய முடியும்தானே?

"யாருக்கு தெரியும்? இரண்டு பேருக்கு மட்டும்தான் தெரியும். ஒன்று பாரத ஸ்டேட் வங்கி. அடுத்து ஆளும் அரசு. அவர்களுக்கு மட்டுமே தெரியும். இவர்கள் போக 140 கோடி மக்களுக்கு அந்தத் தகவல் தெரிய வேண்டாமா? இதில் மேலும் சிக்கல் என்னவென்றால், ஆளும் அரசுக்கு பாஜகவுக்கு நிதி கிடைத்தாலும் தெரியும். எதிர்க்கட்சிக்கு ஒரு காப்பரேட் நிறுவனம் நிதி கொடுத்தாலும் தெரியும்.
இதனால் என்ன சிக்கல் என்றால், ஆளும் அரசு பாஜகவுக்கு ஒரு நிறுவனம் நிதி அளித்தால் மகிழ்ச்சியாக இருக்கும். அதே எதிர்க்கட்சியான வேறு ஏதேனும் கட்சிக்கு அளித்தால், அந்த நிறுவனத்தை மறைமுகமாகப் பழிவாங்கும்.

ஆகவேதான் இந்தத் திட்டத்தை சட்டப்பூர்வமான கையூட்டு என்று நான் சொல்லிக் கொண்டுள்ளேன்.
மார்ச் 6 மற்றும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் எஸ்பிஐ தன்னிடம் உள்ள தரவுகளை எல்லாம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்திருக்கிறார்கள். இந்தக் கெடுவை நீடிக்க வேண்டும் என்று அரசும் எஸ்பிஐயும் நீடிக்க வேண்டும் என்று கேட்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால், அது உறுதியாக நடக்குமா என நான் சொல்ல முடியாது.

ஒருவேளை நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்காமல், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருந்தால் நாங்களே அப்போது இந்தச் சட்டத்தை ரத்து செய்து, அனைத்து ஆவணங்களையும் வெளியிட்டிருப்போம்" என்று பேசி இருக்கிறார்.
அவரிடம் இந்தத் திட்டமே சட்டத்திற்குப் புறம்பானது என்பதைக் காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது. அப்படி உள்ள போது காங்கிரஸ் ஏன் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியைப் பெற்றது. மறுத்திருக்கலாமே? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு அவர், "வேறு வழியே இல்லை. ஒரு அரசியல் கட்சிக்குச் சின்ன அளவிலான தொகையைக் கூட கொடுக்க முடியாது. வாங்கவும் முடியாது. ஒரே வழி தேர்தல் பத்திரங்கள்தான். நாங்கள் அரசியல் கட்சி நடத்துகிறோம். தேர்தலில் நிற்கிறோம். அரசியல் கட்சிக்கு என்று செலவுகள் உள்ளன. இந்தப் பத்திரங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்றால்,கையோடு ஏந்திக் கொண்டுதான் ஊர் ஊராகப் போகவேண்டும்.

அதை உணர்ந்தே தேர்தல் பத்திரம் மூலம் நிதியைப் பெற்றோம். நிதி பெற்றுவந்தாலும் இத்திட்டம் தவறானது என்று மக்கள் மன்றத்தில் தொடர்ந்துசொல்லிக் கொண்டுதான் இருந்தோம். அதோடு நிற்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தத் திட்டத்தை ரத்து செய்வோம் என்றும் சொல்லி இருக்கிறோம்.

முன்பு ஒரு கட்சிக்கு நிதி அளிக்கவேண்டும் என்றால், வங்கிக் கணக்கு மூலம் நேரடியாக அளிக்கலாம் என்று இருந்தது. எங்களுக்குக் கிடைக்கும் நன்கொடை நிதியைப் பற்றிய கணக்கு வழக்குகளை நாங்கள் முறையாகத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்போம். அப்படித்தான் எல்லோரும் செய்தனர்.
காப்பரேட் நிறுவனங்கள் நிதியளிக்க ஒரு வரம்பு இருந்தது முன்பு. அந்த வரம்பை பாஜக விலக்கிக் கொண்டது. முன்பு லாபம் அடைந்த கட்சிகள்தான் நிதி அளிக்க முடியும். பாஜக சட்டத்தில் அப்படி இல்லை. யார் வேண்டுமானாலும் வழங்கலாம். நஷ்டம் அடைந்த கம்பெனியும் கொடுக்கலாம். இது எப்படி சாத்தியம். இலாபமே இல்லாத ஒரு கம்பெனியால் எப்படி நன்கொடை கொடுக்க முடியும்?" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications