கொரோனா நோயாளிகள் பற்றாக்குறைன்னு விளம்பரம் கொடுங்க-மத்திய பாஜக அரசை விடாமல் வறுக்கும் ப. சிதம்பரம்
சென்னை: இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே பற்றாக்குறை என்பதை போல மத்திய அரசு பொய்யான தகவல்களை தெரிவித்து வருவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் சாடியுள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள், படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்டவை பற்றாக்குறை என செய்திகள் வருகின்றன. ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனோ, நாட்டில் எதுவுமே பற்றாக்குறை இல்லை என கூறி வருகிறார்.
கடந்த சில நாட்களாக இதனை முன்வைத்து மத்திய பாஜக அரசை ப. சிதம்பரம் ட்விட்டரில் வெளு வெளுவென வெளுத்து வாங்குகிறார். இன்று காலை முதலே மீண்டும் மத்திய அரசு மீதான கடுமையான விமர்சனங்களை ட்விட்டரில் வைத்து வருகிறார்.

ரயில் நிலைய பாதுகாப்புக்கா?
ட்விட்டர் பக்கத்தில் ப. சிதம்பரம் இன்று எழுதியுள்ளதாவது: ரயில் நிலையங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் பெருந்திரளாக ஒன்றுகூடவில்லை என்கிறார் ரயில்வே அமைச்சர்.. ஆமாம் ரயில்வே அமைச்சர் சொல்வதை நம்புங்க... டிவியில் காண்பிக்கப்படும் தொழிலாளர்கள் கூட்டமானது ரயில் நிலையங்களைப் பாதுகாக்க ரயில்வே போலீசாருகு உதவ வந்த கூட்டம்தானாம்.

நோயாளிகளா பற்றாக்குறை?
கொரோனா தடுப்பூசிகளுக்கு நாட்டில் பற்றாக்குறை இல்லை என்கிறார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.. சுகாதாரத்துறை அமைச்சர் சொல்வதை நம்புங்க... இந்த நாட்டில் கொரோனா நோயாளிகளுக்குதான் பற்றாக்குறை.. அனேகமாக தடுப்பூசி போட விரும்பும் கொரோனா நோயாளிகள் பற்றாக்குறை என்பதால் மத்திய அரசு விளம்பரம் கொடுத்தாலும் கொடுக்கலாம்.

எதுவும் மாறவில்லை
நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ்கள் கியூவில் நிற்கின்றன.. மயானங்களில் நீண்ட வரிசைகளில் சடலங்களுடன் நிற்கின்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை நிலைமை மாறவில்லை. முன்பைவிட மோசமாகத்தான் நிலைமை இருக்கிறது.

மே.வங்கம் 6-ம் கட்ட தேர்தல்
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 6-ம் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்த ஒட்டுமொத்த தேசத்தை காப்பாற்றுகிற பொறுப்பு மேற்கு வங்க வாக்காளர்களுக்குதான் இருக்கிறது. இந்த தேசத்தின் சுகாதார கட்டமைப்பு சீர்குலைய காரணமே பாஜகதான். இவ்வாறு ப. சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications