விஜய் சேதுபதி பெரிய தந்திரக்காரர்.. அதை முதலிலேயே செய்திருக்கலாமே.. ஏன் செய்யலை.. மணியரசன் விளாசல்
விஜய்சேதுபதியை விமர்சித்துள்ளார் பெ.மணியரசன்
சென்னை: விஜய் சேதுபதிக்கு இதெல்லாம் தேவையா? முத்தையா முரளிதரனே விஜய் சேதுபதி வேண்டாம் என்று சொன்ன பிறகு படத்தில் இருந்து விலகுகிறார்... இது விஜய் சேதுபதிக்குதான் அவமானம்... முன்னாடியே படத்தில் இருந்து விலகி இருந்தால், இப்படி ஒரு அவமானம் நடந்திருக்காது என்று பெ.மணியரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று சினிமாவில் விஜய் சேதுபதி நடிக்க பெரும் எதிர்ப்பு கிளம்பியது.. வெட்கமாய் இல்லையா என்று கேட்டு விஜய் சேதுபதிக்கு எதிராகவும் ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகின. எனினும், ஒரு நல்ல வீரரின் வரலாறு வெளி உலகத்துக்கு தெரிய வர வேண்டும் என்று விஜய் சேதுபதி உறுதியாக இருந்தார்.

"விஜய் சேதுபதிக்கு பண கஷ்டம் என்றால், தமிழக மக்களிடம் வசூல் செய்து தருகிறோம் என்றும், இந்த படத்திலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசனும் கண்டனங்களை பதிவிட்டிருந்தார்.
இந்த சமயத்தில்தான், "என்னால நீங்கள் கஷ்டப்பட வேணாம்.. இந்த படத்திலிருந்து விலகி கொள்ளுங்கள்" என்று விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுக்கவும், அந்த படத்தில் இருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார். விஜய் சேதுபதி அந்த படத்தில் இருந்து விலகிய செய்தியும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்வாங்கினாலும் விஜய் சேதுபதி மீது எங்களுக்கு கோவம் இருக்கத்தான் செய்யும் என்றும், இதெல்லாம் ஒரு டிராமா என்றும் பல்வேறு விதமான கருத்துக்கள் இன்னமும் எழுந்தபடியே உள்ளன.
விஜய் சேதுபதியின் இந்த திடீர் விலகல் குறித்து பெ.மணியரசன் பிரபல இதழுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார்.. அதில் அவர் சொல்லி உள்ளதாவது: "விஜய் சேதுபதியை, முத்தையா முரளிதரன் விலக சொன்னதற்கு காரணம், அவர் மீதான பரிதாபமோ, அனுதாபமோ கிடையாது.. இந்த படம் வெளியானால், தமிழகத்தில் போராட்டங்கள் வெடிக்கும்.. படமும் தோல்வி அடையும்.. அதனால் தனக்கு மிகப்பெரிய அவமானம் நேரிடும் என்பதால்தான்.. முத்தையா முரளிதரன் ரொம்பவே தந்திரமாக செயல்பட்டுள்ளார்... விஜய் சேதுபதி தன்னை அவமானப்படுத்தி கொண்டுள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவும், மக்கள் செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலரும் கேட்டுக் கொண்ட பிறகும் கூட, முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி கைவிடவில்லை... முத்தையா முரளிதரனே விஜய் சேதுபதி வேண்டாம் என்று சொன்ன பிறகு விலகுகிறார். இது விஜய் சேதுபதிக்கு மிகுந்த அவமானம்... தமிழ்மக்களின் வேண்டுகோளை ஏற்று முன்னாடியே விலகி இருந்தால், இப்படி ஒரு அவமானம் ஏற்பட்டிருக்காது.. விஜய் சேதுபதி தனது பிடிவாதத்தால், ஆணவத்தால், அவமானத்தை சந்தித்துள்ளார்" என்றார்.












Click it and Unblock the Notifications