என் மகன்களுக்கு அரசியல் ஆசை இல்லை; வாரிசு அரசியலுக்கு எதிரானவன் நான்! அடித்துச் சொன்ன பாரிவேந்தர்!
சென்னை: தனது குடும்பத்தில் தன்னைத் தவிர வேறு யாருக்கும் அரசியல் ஆசை இல்லை என்று பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணி சார்பாகப் பெரம்பலூர் தொகுதி வேட்பாளரான ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வாக்காளர்களைச் சந்தித்து அசுர வேகத்தில் வாக்குகளைச் சேகரித்து வருகிறார்.

அவர் பரப்புரை செய்து வரும் பல கிராமங்களில் எதிர்பார்ப்பைத் தாண்டி அவருக்கு அதிக வரவேற்பு உள்ளது.
பாரிவேந்தர் கிட்டத்தட்ட 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் அவரது எதிரியை வீழ்த்தினார். கடந்த 2019 தேர்தலில் ஒரு சில வேட்பாளர்கள்தான் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். அதில் பாரிவேந்தரும் ஒருவர்.
இவர் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தனது தொகுதியில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள சுமார் 1200 மாணவர்களை இவரது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மூலம். பைசா செலவில்லாமல் இன்ஜினியரிங் முதல் அக்ரி வரை படிக்க வைத்து பட்டம் பெற வைத்துள்ளனர்.
மீண்டும் எம்பி ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களை அடையாளம் கண்டு, ஒரு ஆண்டுக்கு 300 குடும்பங்கள் வீதம் 5 ஆண்டுக்கு 1500 குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர் சிகிச்சையை இலவசமாக அளிப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

இவர் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு முன்னால் பல தகவல்கள் ஊகங்கள் அடிப்படையில் பரவி வந்தன.
இந்த முறை பாரிவேந்தர் போட்டியிடமாட்டார் என்று தகவல் கசிந்தது. அவருக்குப் பதிலாக அவரது மகன் ரவி பச்சமுத்து போட்டியிடப் போகிறார் என்று ஊடகங்கள் எழுதின.
அதைப் போன்று அண்ணாமலைதான் இந்த முறை பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்று இன்னொரு பக்கம் தகவல் பரவியது.
இவை அனைத்துமே ஊகங்கள்தான். அதை எல்லாம் உடைத்தெறிந்து விட்டு, மீண்டும் 3வது முறையாகக் களம் கண்டுள்ளார் பாரிவேந்தர். அவரது மகன் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை. அப்படி ஒரு தகவல் கசிந்ததில் உண்மை உள்ளதா? ஆகிய விசயங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
இது பற்றி பாரிவேந்தர், "தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளில் மிக இளமையான கட்சி ஐஜேகே. இந்தக் கட்சியைத் தொடங்கி 13 ஆண்டுகள்தான் ஆகிறது. அப்படி உள்ளபோது, எங்கள் கட்சி படிப்படியாக வளர்ந்து கொண்டே வருகிறது.
ஒரு கட்சி தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று சட்டமன்றத்திற்கு அல்லது நாடாளுமன்றத்திற்குச் சென்று குரல் கொடுக்கும்போது அக்கட்சியில் உள்ள தொண்டர்கள் உற்சாகம் பெறுவார்கள். அவர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். எம்பி, எம்.எல்.ஏ என கிடைக்கின்றபோது கட்சியின் அடையாளம் இன்னும் கூடும். புகழ் அதிகரிக்கும்.

அதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது என்ன? வெற்றிக்கான யூகம். அதற்காகத்தான் தனிச் சின்னத்தில் நிற்காமல் தோழமை கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.
அதன்மூலம் கட்சி வளர்ந்து ஒரு அங்கீகாரம் கிடைக்கும்போது தனிச் சின்னத்தைத் தேர்ந்தெடுத்து நிற்போம். அதற்கான முதற்கட்ட வேலைகள் இதான் இவை. தோழமைக் கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடுவதில் எந்தத் தயக்கமும் இல்லை.
எங்கள் கட்சி இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்காகத் தொடங்கப்பட்டது. இந்தியாவில் இப்போது ஜனநாயகம் இல்லை. குடும்ப ஆட்சிதான் நிலவி வருகிறது. ஆகவே அதை மீட்டெடுக்க வேண்டும் என உழைத்து வருகிறோம்.
இப்போதைக்கு என் குடும்பத்தில் என்னைத் தவிர யாரும் அரசியலுக்கு வருவதற்குத் தயாராக இல்லை. அவர்கள் தங்களின் நிறுவனங்களைக் கவனித்து வருகிறார்கள். தொழிலில் அக்கறை செலுத்தி வருகின்றனர்.

சிலர் தவறாக நினைத்துக் கொண்டு இதைப் போன்ற உண்மைக்குப் புறம்பான தகவலைப் பரப்பி விட்டுள்ளார்கள். எனக்குப் பதிலாக என் மகன் அரசியலுக்கு வருவார் என்று நான் சொல்லவில்லை. அவர் தேர்தலில் போட்டியிடுவார் என்று நான் சொல்லவில்லை. அவரும் சொல்லவில்லை. அப்படி ஒரு விருப்பமும் அவருக்கு இல்லை.
ஆகவே, நான் மட்டுமே தேர்தல் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். நான் தான் இந்தக் கட்சியின் நிறுவனர். எனது கட்சி எந்தத் தேர்தலையும் தவறவிட்டுவிடக் கூடாது. எனவே தொடர்ந்து நான் போட்டியிட்டு வருகிறேன். அந்த அக்கறை எனக்கு அதிகம் உள்ளது. அதன்பொருட்டு நான் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறேன்" என்கிறார்












Click it and Unblock the Notifications