இந்தியாவில் கிடைத்த இதயம்.. சென்னையில் மறுவாழ்வு பெற்ற பாகிஸ்தான் பெண்.. நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை: பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண்ணுக்கு இந்தியாவில் இதயம் கிடைத்துள்ளது. சென்னையில் உள்ள மருத்துவனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது உடல் நலம் தேறிய பாகிஸ்தான் பெண், இந்திய அரசுக்கும், மருத்துவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இதய நோயால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் பெண்ணுக்கு, இந்தியாவில் மறுவாழ்வு கிடைத்துள்ளது. இருதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் அந்த பெண் தற்போது புதிய வாழ்க்கையை பெற்றுள்ளார். சென்னையை சேர்ந்த மருத்துவர்கள் இந்த விவகாரத்தில் பெரும் பங்காற்றியுள்ளனர். இது பற்றிய விவரத்தை பார்க்கலாம்.

பாகிஸ்தானை சேர்ந்தவர் ஆயிஷா ராஷன் (வயது 19). இவரது தாயார் சனோபார். ஆயிஷா ராஷனுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதய பாதிப்பு இருந்துள்ளது. பாகிஸ்தானில் போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதி இல்லாததால், இந்தியாவிற்கு சிகிச்சைக்காக கடந்த 2014 ஆம் ஆண்டு தனது மகளை சனோபர் அழைத்து வந்தார். அப்போது ஆயிஷாவிற்கு இதயத்தில் பம்ப் பொருத்தப்பட்டது.
எனினும், துரதிர்ஷ்டவசமாக அந்த கருவி எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை. இதனால், இதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த ஆயிஷாவின் தாயார் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை டாக்டர்களான கே.ஆர். பாலகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் ராவ் ஆகியோரை நாடியுள்ளார்.
ஆய்ஷாவை பரிசோதித்த மருத்துவக் குழு, இதயத்தின் பம்பில் லீக் இருப்பதாகவும் இதய மாற்று அறுவை சிகிச்சை அவசியம் என்றும் ஆலோசனை வழங்கியது. மேலும் ஆய்ஷா எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதய மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ நடைமுறைகளுக்கு ரூ.35 லட்சம் வரை செலவு ஆகும் என்பதால் ஆய்ஷாவின் குடும்பத்தினர் தயக்கம் காட்டினர்.
இதனால், மருத்துவக்குழு ஐஸ்வர்யம் டிர்ஸ்ட் மூலமாக ஆய்ஷா குடும்பத்தினருக்கு தேவையான நிதி உதவியை செய்து கொடுத்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக டெல்லியில் இருந்து ஆய்ஷா ரஷனுக்கு இதயம் கிடைத்தது. இதையடுத்து, அறுவை சிகிச்சையும் முற்றிலும் இலவசமாக மருத்துவமனையில் செய்யப்பட்டது. தற்போது உடல் நலம் பெற்றுள்ள ஆய்ஷா ரஷன், இந்திய அரசுக்கும் மருத்துவர்களுக்கும் தனது நன்றியை தெஇவித்துள்ளார்.
ஆய்ஷாவின் தாயார் சனோபர் கூறுகையில், "வெளிப்படையாக சொல்வது என்றால் இந்தியாவுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தானில் போதிய அளவு மருத்துவ வசதி இல்லை. இந்தியா மிகவும் நட்புடன் நடந்து கொண்டதை நான் உணர்ந்தேன். பாகிஸ்தானில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கான வசதி இல்லை என்று சொன்னதால் நாங்கள் மருத்துவர் பாலகிருஷ்ணனை அணுகினோம்.
இந்தியாவுக்கும் இந்திய மருத்துவர்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். இந்தியாவில் மறுவாழ்வு கிடைத்த பாகிஸ்தான் பெண்ணான ஆய்ஷா, பேஷன் டிசைனர் ஆக வேண்டும் என்ற தனது லட்சியத்தை எட்டுவேன் என்ற நம்பிக்கையுடன் மகிழ்ச்சி பொங்க கூறினார்.












Click it and Unblock the Notifications