எல்லா கோட்டையும் அழிங்க.. பழனி கோவில் நிலம் எங்களுக்கு சொந்தம்! பத்திரத்தோடு வந்த ஒரிஜினல் வாரிசுகள்
சென்னை: பழனி தண்டபாணி மடம் நில மோசடி வழக்கில் நிலத்தின் 1880ஆம் ஆண்டு உரிமையாளர் குப்புசாமி மணியகார் வாரிசுதாரர்களான சுந்தரி அவரது மகன் விஷ்ணு சுதர்சன் மகள் ஜெயலட்சுமி திண்டுக்கல்லில் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர். அவர்கள் தங்களிடம் 1880 ஆண்டில் இருந்து தற்போது வரை உள்ள உண்மையான ஆவனங்களை கொடுத்து, சம்பந்தப்பட நிலம் எங்கள் குடும்பத்திற்கு மட்டுமே சொந்தம் என சிபிசிஐடி போலீசாரிடம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்தின் நில மோசடி தொடர்பாக, பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் போலி அறக்கட்டளை பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த 15.07.2026 அன்று இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தென்மண்டல எஸ்பி சாஜிதா நேரடியாக வருகை தந்து, கோயில் செயல் அலுவலர் கணபதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார். இவ்வழக்கு தொடர்பாக, கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, ஓய்வுபெற்ற வட்டாட்சியர் (தாசில்தார்) மாரியப்பன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னச்சாமி, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சிவனேசன் ஆகியோரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு, 1880-ஆம் ஆண்டு முதலாக உள்ள ஆவணங்கள் பெறப்பட்டன.
மேலும், வருவாய்த் துறை அலுவலர்கள் சார்பில் நிலத்தின் பல்வேறு காலகட்ட நில வகைப்பாடு (Land Classification) தொடர்பான ஆதார ஆவணங்கள் சிபிசிஐடி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட நிலம்ஆக்கிரமிப்பில் இருந்த போது அங்கு செயல்பட்ட கடைகளுக்கு எந்த ஆவணங்களின் அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் கேட்டு மின்வாரியத்திற்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அதனடிப்படையில் மின்வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை, சிபிசிஐடி அதிகாரிகள் திண்டுக்கல் அலுவலகத்தில் வைத்து தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு உயர்நீதிமன்ற கிளை ஏற்கனவே நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. அந்த உத்தரவின்படி, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நேற்று (27.07.2026) திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு விசாரணைக்காக ஆஜரானார்.
காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை சிபிசிஐடி ஆய்வாளர் சந்தானலட்சுமியும், அதன்பின் 11:30 மணி முதல் சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கமும் தொடர் விசாரணையை மேற்கொண்டனர். இந்த விசாரணை மொத்தம் 7 மணி நேரம் நடைபெற்று மாலை 5:00 மணி முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று (28.07.26) 2வது நாளாக பழனி நிலத்தை பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.
அவரிடம், தென்மண்டல சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ஷாஜிதா இன்று சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டர். இந்நிலையில் இவ்வழக்கில் திடீர் திருப்பமாக, 1880-ஆம் ஆண்டின் நில உரிமையாளர் எனக் கூறப்படும் குப்புசாமி மணியகாரரின் வாரிசுதாரர்கள் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். குப்புசாமி மணியகாரரின் வாரிசுதாரர்களான சுந்தரி, அவரது மகன் விஷ்ணு சுதர்சன் மற்றும் மகள் ஜெயலட்சுமி ஆகியோர் சிபிசிஐடி போலீசாரின் உத்தரவின் பேரில் ஆஜராகினர்.
அப்போது, தங்களது வசமிருந்த நிலம் தொடர்பான அசல் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை அவர்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி எஸ்பி ஷாஜிதா தலைமையில், மாலை 6:00 மணி முதல் 7:15 மணி வரை தீவிர விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனையும் உடன் வைத்து வாரிசுதாரர்களிடம் சிபிசிஐடி போலீசார் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்கு பின், வாரிசுதாரர்களின் வழக்கறிஞர் கண்ணகி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, "சுந்தரி முருகன் என்பவரை 'பழனி திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்து' என்று கூறி விசாரணைக்கு அழைத்திருந்தனர். ஆனால், அந்தச் சொத்தின் அசல் பத்திரத்தின் உண்மையான உரிமையாளர்கள் அவர்கள்தான் என்பதற்கான ஆவணங்களை இன்று நாங்கள் கொண்டு வந்து சமர்ப்பித்துள்ளோம். எங்களை விசாரித்து வாக்குமூலமும் பெற்றுள்ளனர்.
இதற்குப் பிறகு, நாங்கள் நீதிமன்றத்தை நாடி, நாங்கள்தான் உண்மையான உரிமையாளர்கள் என்பதை நிரூபித்து எங்களது சொத்தை மீட்டெடுப்போம். நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளோம். எங்களுக்கு சாதகமாக உள்ள அனைத்து ஆவணங்களையும் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளோம்" என்றார்.
சுந்தரியின் சகோதரர் கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது," 1882, 1888-ஆம் ஆண்டுகளில் குப்புசாமி மணியக்காரர் எழுதிக் கொடுத்த ஒரிஜினல் டாக்குமெண்ட் இதெல்லாம். அவர் அக்காவோட மாமனாரோட தாத்தா. அவங்க வந்து அதை ஒரு பிரைவேட் மடத்துக்கு தான் எழுதிக் கொடுத்திருக்காங்க. அதுக்கப்புறம் அது சம்பந்தமான ஒரிஜினல் பத்திரங்கள் எல்லாம் இவங்ககிட்டதான் இருந்துச்சு. எல்லாத்தையும் கொண்டுவந்து சமர்ப்பித்துள்ளோம். இது சம்பந்தமா சமீபத்துல போன வருஷம் ஒரு நீதிமன்றத்தில் தீர்ப்பும் வந்துள்ளது.
இது வந்து சரியான முறையில தர்ம சாஸ்திரப்படி கொடுத்தது. ஒரு தனியார் மடத்துக்கு என்ன நோக்கத்துக்காக பண்ணிக் கொடுத்தாங்களோ, அந்த நோக்கம் நிறைவேறலைன்னா அது உரிமையாளர்களுக்கு மீண்டும் வந்து விட வேண்டும் என்ற சட்டம் உள்ளது. நாங்க 1882, 1888-ஆம் ஆண்டின் ஒரிஜினல் ஆவணங்கள் எங்களிடம் இருக்கிறது. அதை அனைத்தையும் கொண்டுவந்து சமர்ப்பித்து உள்ளோம். அதற்கான விவரங்களை வாங்கிக்கிட்டு சாட்சியத்துக்கு கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது.
"அடுத்த கட்ட நடவடிக்கை நீதிமன்றம் தான். எங்கள் நோக்கம், இந்த சொத்தை மீண்டும் வேண்டும் என்று கேட்கவில்லை. இது திருப்பி தர்ம காரியத்துக்கு சரியான முறையில் போக வேண்டும். இதுல இந்து சமய அறநிலையத் துறைக்கு (HR & CE) உண்மையிலேயே உரிமை இல்லை. HR & CE-க்கு இதுல உரிமை இல்லை. தனியார் மடத்துக்கு கொடுத்தது. ஆனால் அவர் அதை முறையான காரியத்துக்கு உபயோகப்படுத்தவில்லை.
அதை HR & CE-க்கு சொந்தம்னு நினைக்கிறாங்கன்னா, அதை பின்னாடி நீதிமன்றத்துல முடிவு பண்ண வேண்டும். HR & CE தரப்புல அப்பீல் போயிருக்காங்க. அந்த சப்-கோர்ட்ல HR & CE-க்கு உரிமை இல்லைன்னு தீர்ப்பு வந்த உடனே, அவங்க மாவட்ட நீதிமன்றத்துக்கு (District Court) அப்பீல் போயிருக்காங்க. இந்த சொத்தை எந்த நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டதோ அதற்காக பயன்படுத்த வேண்டும். இதை சொல்ல வந்திருக்கோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
