திருவள்ளூர் மாவட்டத்துடன் இந்த இரண்டு கிராமங்களை முழுமையாக இணைக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: பழஞ்சூர், பாப்பன்சத்திரம் ஆகிய இரு கிராமங்களை முழுமையாக திருவள்ளூர் மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் கீழ் இணைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1997 ம் ஆண்டு எம்ஜிஆர் செங்கை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் என இரு புதிய மாவட்டங்கள் அமைக்கப்பட்டது. இவ்வாறு பிரிக்கும் போது பழஞ்சூர், பாப்பன்சத்திரம் ஆகிய இரண்டு கிராமங்கள் திருவள்ளூர் மாவட்டத்தின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவில்லை.

திருவள்ளூர் மாவட்டம் செம்பரப்பாக்கம் கிராம பஞ்சாயத்திற்கு கீழ் வரும் இந்த இரு கிராமத்திற்கான நில ஆவணங்கள், வரி, பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவு, மின்சாரம் வருவாய் ஆவணங்கள், கிராம நிர்வாகம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழும், காவல்நிலையம், மருத்துவமனை, குடும்ப அட்டை ஆகியவை திருவள்ளூர் மாவட்டத்தின் கீழும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் இருக்கும் இந்த இரு கிராம மக்கள் அரசின் சேவைகளை பெறுவதற்கு இரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், இரு கிராமங்களையும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர கோரி செம்பரம்பாக்கம் கிராம முன்னாள் தலைவர் வின்சென்ட் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு , இரு கிராமங்களின் வருவாய் நிர்வாகத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றுவது தொடர்பான கருத்துருவை 10 நாட்களுக்குள் வருவாய் நிர்வாகத்துறை செயலாளருக்கு அனுப்ப வேண்டும் என்று வருவாய் நிர்வாக துறை ஆணையருக்கு உத்தரவிட்டது. அந்த கருத்துருவை பெற்ற 6 வாரங்களுக்குள் அதன் மீது தகுந்த உத்தரவை பிறப்பிக்க தமிழக வருவாய் நிர்வாகத் துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications