நியூசிலாந்து vs வங்கதேச போட்டியில் பரபரப்பு.. சேப்பாக்கத்தில் பாலஸ்தீன ஆதரவு பதாகை! பகீர் சம்பவம்
சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நியூசிலாந்து வங்கதேசம் இடையேயான போட்டியில் திடீரென இருவர் பாலஸ்தீனுக்கு ஆதரவாகப் பதாகை ஏந்தியதால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இஸ்ரேல் நாட்டில் இப்போது போர் ஏற்பட்டுள்ளது அனைவருக்கும் தெரியும். கடந்த சனிக்கிழமை யாருமே எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் மீது காசாவில் உள்ள ஹமாஸ் படை சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் 5000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இஸ்ரேல் போர்: இந்தத் தாக்குதலை இஸ்ரேல் துளியும் எதிர்பார்க்கவில்லை. இதனால் இஸ்ரேல் நாட்டில் பல்வேறு இடங்களிலும் பாதிப்புகள் மோசமாக இருந்தது. ஏவுகணை தாக்குதல் மட்டுமின்றி, பாராசூட் மூலமாகவும் ஜீப் மூலமாகும் இஸ்ரேல் உள்ளே வந்த ஹமாஸ் படையினர் சரமாரி தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலால் ஆரம்பத்தில் இஸ்ரேல் திணறினாலும் கூட அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு பதிலடி கொடுத்தது.
காசா பகுதியில் இருக்கும் பல்வேறு இடங்களைக் குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் தாக்குதலைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ள இஸ்ரேல், வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே இன்று சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நியூசிலாந்து வங்கதேசம் இடையேயான போட்டியில் திடீரென இருவர் பாலஸ்தீனுக்கு ஆதரவாகப் பதாகை ஏந்தியதால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பாலஸ்தீன ஆதரவு பதாகை: இன்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நியூசிலாந்து வங்கதேசம் நாடுகளுக்கு இடையே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 50 ஒவர்களில் 9 விக்கெட்களை இழந்து 245 ரன்களை எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி வெறும் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 248 ரன்களை எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இதற்கிடையே இந்தப் போட்டி நடந்து கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் திடீரென பாலஸ்தீனுக்கு ஆதரவான பதாகை காட்டி உள்ளார். இது நேரலையிலும் ஒளிபரப்பானதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக போலீசார் அங்கே விரைந்தனர். பதாகை காட்டிய இளைஞரையும் அவருடன் வந்த மற்றொரு நபரையும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணை: இதில் முதற்கட்ட விசாரணையில், பாலஸ்தீன் ஆதரவாகப் பதாகை காட்டிய நபர் முகமது ஹசன் என்பதும் அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்னை வந்துள்ளார். இன்று வங்கதேசத்திற்குப் போட்டி இருந்ததால் அதைப் பார்க்க சேப்பாக்கம் மைதானத்திற்கு அவரது நண்பருடன் வந்தது தெரிய வந்துள்ளது.
சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே பதாகை வாங்கி வந்துள்ளனர். பின்னர் உள்ளே வந்ததும் பாலஸ்தீனுக்கு ஆதரவாக எழுதி அதைத் திரையில் காட்டியது தெரியவந்தது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மொகம்மது ஹசன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரிடமும் போலீசார் அடுத்தகட்ட விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications