இந்த மாசம் பாமாயில் வாங்கிட்டீங்களா? தாயுமானவர் திட்டத்தில் பொருள் தந்தும் செலவு தொகை தரலையா? ஏன்
சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் பல வசதிகளை அரசு செய்து தந்துள்ளது.. மேலும் ரேஷன் முறைகேடு உள்ளிட்ட புகார்கள் இருந்தால், பொதுமக்கள் தமிழக அரசிடம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 5950 என்ற தொடர்பு கொண்டு நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், கிடங்குகளில் ஆய்வு செய்து தரமான பொருட்களை அனுப்புவதில், முழு கவனமுடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கும் தமிழக உணவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தின்கீழ், சென்னையில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே கொண்ட ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்கள் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

ரேஷன் பொருளின் விநியோக தேதியினை, சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளின் அறிவிப்பு பலகையிலிருந்தே சர்க்கரை அட்டைதாரர்கள் அறிந்து கொள்ள முடியும்.
தாயுமானவர் திட்டம்
அந்தவகையில், இத்திட்டத்தின்கீழ் 21.70 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு, மாதந்தோறும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
ஆனால் இந்த பணியை செய்யும் ரேஷன் பணியாளர்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது.. அதாவது வாகனங்கள் மூலம் பயனாளிகள் வீடுகளுக்குச் சென்று பொருட்கள் வழங்கப்படும் ஊழியர்களுக்கு கார்டுக்கு 40 ரூபாய், ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக 200 ரூபாய், வண்டி வாடகை 1,800 ரூபாய் வழங்கப்படும் என, அரசு அறிவித்திருந்தது.
ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை
எனினும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு 3 மாதங்களாகியும், இதுவரை இதற்கான செலவு தொகை வழங்கப்படவில்லையாம்.. சில கூட்டுறவு சங்கங்கள், வாகன வாடகை மட்டும் வழங்கியிருப்பதாக தெரிகிறது. எனவே, அரசு அறிவித்தபடி, ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் செலவு தொகையை வழங்க, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "தாயுமானவர் திட்டத்தை, ரேஷன் ஊழியர்கள் 3 மாதமாக சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள்..
ஆனால், ஊழியர்களுக்கு தருவதாக சொன்ன தொகை இன்னும் தரப்படவில்லை. பல கடைகளில் வாகன வாடகையையும் ஊழியர்களே தந்துவிடும் நிலைமை உள்ளது.. எனவே இந்த திட்டத்துக்காக அறிவித்த ஊக்கத்தொகை மற்றும் செலவு தொகையை, உடனே விடுவிக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பழைய பாமாயில் பாக்கெட்
இதனிடையே திருவள்ளூர் மாவட்டம், புழல் பகுதியில் ரேஷன் கடைகளில், காலாவதியான பாமாயில் வழங்கப்படுவதாக புகார்கள் பரவியது பெரும் பரபரப்பை தந்துவிட்டது.
தமிழக ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், லிட்டர் பாமாயில், 25 ரூபாய் என்று குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.. இந்த பாமாயிலை 2 மாதங்கள் மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும்..
காலாவதியான பாமாயில்
ஆனால், புழல் பகுதியில் ஒரு கடைகளில் காலாவதியான பாமாயில் வினியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.. இது குறித்து உடனடியாக அதிகாரிகள் விசாரணையை நடத்தினார்கள்.. அப்போது சம்பந்தப்பட்ட கடையில் ஏற்கனவே இருப்பில் வைக்கப்பட்டிருந்த 3 பழைய பாமாயில் பாக்கெட்டை ரேஷன் ஊழியர், விநியோகித்திருப்பது உறுதியானது..
இதையடுத்து, கார்டுதாரர்களுக்கு பாமாயில் வழங்கும்போது தேதியை சரிபார்த்து வழங்குமாறு ஊழியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிடங்குளில் ஆய்வு செய்து தரமான பொருட்களை அனுப்புவதில், முழு கவனமுடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கும் தமிழக உணவுத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications