பாமாயில் விலை குறையுதா? சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை குறைத்த மத்திய அரசு.. பின்னணி என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமாயில் உட்பட சமையல் எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே போகிறதே என்று இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.. பண்டிகை காலமும் நெருங்கி விட்டது.. இப்படிப்பட்ட சூழலில் ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கான வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது... அப்படியானால் இனி கடையில் வாங்கும் எண்ணெய் விலையும் குறையுமா? அதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி...!!

கடந்த ஒரு வருட காலமாகவே, சமையல் எண்ணெய் விலை சுமார் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.. விரைவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கிவிட்டதால், வீடுகளில் எண்ணெய் பயன்பாடும் அதிகரிக்க போகிறது... இனிப்பு, கார வகைகள், பலகாரங்கள் என சமையல் வரை எண்ணெய் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது.. விலை குறைந்தால் அது நேரடியாக குடும்பங்களுக்கே நிம்மதியாக இருக்கும்.

Palm Oil Price

மத்திய அரசு இறக்குமதி வரி

இந்த நிலையில்தான் மத்திய அரசு இறக்குமதி வரியை குறைத்துள்ளது... கச்சா பாமாயில் மற்றும் கச்சா சோயாபீன் எண்ணெய்க்கான அடிப்படை இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் சூரியகாந்தி எண்ணெய்க்கு இன்னும் பெரிய சலுகை கிடைத்துள்ளது. கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கான அடிப்படை இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து நேரடியாக பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த அடிப்படை வரி மொத்தமாகவே நீக்கப்பட்டுள்ளது.

ரீஃபைண்டு எண்ணெய்களுக்கான வரி

அதேபோல சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளது... சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் சோயாபீன் எண்ணெய்க்கான இறக்குமதி வரி 32.5 சதவீதத்தில் இருந்து 27.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்க்கான வரி 32.5 சதவீதத்தில் இருந்து 22.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விகிதங்கள் செப்டம்பர் 24-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

இங்கேதான் ஒரு முக்கியமான விஷயம் கவனிக்க வேண்டியிருக்கிறது.. "சூரியகாந்தி எண்ணெய்க்கான வரி பூஜ்ஜியம்" என்று சொன்னதும், இனி அந்த எண்ணெய் இறக்குமதிக்கு எந்த வரியும் கிடையாது என்று நினைத்துவிடக்கூடாது... அடிப்படை வரி மட்டும் அடியோடு நீக்கப்பட்டுள்ளது.. மற்ற சில வரிகள் இருப்பதால், கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கான மொத்த இறக்குமதி வரி 16.5 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைகிறது.

பாமாயில், சமையல் எண்ணெய் விலை

அதேபோல் கச்சா பாமாயில், சோயாபீன் எண்ணெய்க்கான மொத்த இறக்குமதி வரி 16.5 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக குறைகிறது. இதை சிம்பிளாக சொன்னால், வெளிநாட்டில் இருந்து எண்ணெய் வாங்கி இந்தியாவுக்குக் கொண்டுவரும் செலவு குறைய போகிறது.

அந்த பலன் அடுத்தடுத்து எண்ணெய் நிறுவனங்களுக்கும், அனைத்து விற்பனையாளர்களுக்கும் சென்று, கடைசியில் நுகர்வோரான நம்மிடம் வந்து சேர்ந்தால்தான் கடையில் எண்ணெய் விலை குறையும். அதனால்தான் மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் வரி குறைந்துவிட்டது என்பதற்காக நாளைக்கே கடையில் ஒரு லிட்டர் எண்ணெய் இத்தனை ரூபாய் குறைந்துவிடும் என்று சொல்ல முடியாது.. வெளிநாட்டு எண்ணெய் விலை, போக்குவரத்து செலவு, ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல விஷயங்களும் விலையை தீர்மானிக்கும்.

சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய்

நம்முடைய நாட்டை பொறுத்தவரை இது முக்கியமான விஷயம்... நாட்டின் சமையல் எண்ணெய் தேவையில் பெரும் பகுதி இறக்குமதி மூலமாகத்தான் பூர்த்தி செய்யப்படுகிறது. குறிப்பாக பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றில் வெளிநாட்டு இறக்குமதிக்கு இந்தியா கணிசமாக சார்ந்திருக்கிறது.

பண்டிகை காலத்தில் எண்ணெய் தேவை அதிகரிக்கப் போகும் நிலையில், இறக்குமதி செலவு குறைவதால் எண்ணெய் நிறுவனங்கள் கூடுதலாக எண்ணெய்யை இறக்குமதி செய்யும் சூழலும் உருவாகலாம். அதனால் மார்க்கெட்டில் தேவையான அளவு எண்ணெய் கிடைப்பதற்கும் இது உதவலாம்.

அதிலும் தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் சூரியகாந்தி எண்ணெய்க்கு அடிப்படை இறக்குமதி வரி முழுமையாக நீக்கப்பட்டிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்...

இல்லத்தரசிகள் ஹேப்பி

எண்ணெய் விலை குறைந்துவிட்டது என்று சொல்ல முடியாது என்றாலும், விலை குறைவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையை மத்திய அரசு இப்போது எடுத்திருக்கிறது... இதனால் உள்ளூர் வெளிச்சந்தையில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் விலை லிட்டருக்கு கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

பண்டிகை காலம் நெருங்கும் வேளையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+