தொண்டர்கள் தேர்வு செய்யல.. அதிமுக நிர்வாகிகளை “சாணி பிள்ளையாருடன்” ஒப்பிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன்
சென்னை: அதிமுகவில் யாரும் தொண்டர்களால் தேர்வு செய்யப்படுவது இல்லை என்றும், அனைவரும் நியமனம் செய்யப்படுவதாகவும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சித்து இருக்கிறார்.
ஒற்றைத் தலைமை தீர்மானம் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் எதிர்ப்புகள், வழக்குகளை கடந்து ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

ஓங்கிய எடப்பாடி கை
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை நீக்கினார் ஓ.பன்னீர்செல்வம்.

முக்குலத்தோர் அமைப்புகள்
எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு மோதல் ஏற்பட்டதில் இருந்து கட்சியில் சாதி அடிப்படையில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டு வந்தது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்துக்களும் பகிரப்பட்டு வந்தன. 100 தேவர் அமைப்புகள் ஒன்றிணைந்து இதையே கோரிக்கையாக முன்வைத்து கடிதம் எழுதின.

பண்ருட்டி ராமசந்திரனுடன் சசிகலா சந்திப்பு
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்ஜிஆர் காலத்துக்கு நிர்வாகியுமான பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசித்தார் சசிகலா. "என்னுடைய மூத்த அண்ணனை பார்க்க வந்தேன். அரசியல் விசயமாக கலந்து பேசினேன். சாதி, மதம் கடந்து எல்லோரும் சேர்ந்து ஒன்றாய் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே எனது ஆசை." என சசிகலா பேசினார்.
Recommended Video

ராமச்சந்திரன் பேட்டி
சசிகலாவை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், "இன்றைய நிர்வாகிகளாக இருந்தாலும் சரி, அமைப்பில் இருப்பவர்களானாலும் சரி, முறைப்படி உறுப்பினர்கள் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர்களாக இல்லை. எல்லாம் நியமனம். சாணியை எடுத்து பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டியது. அந்த பிள்ளையாருக்கே விழுந்து கும்பிட வேண்டியது. இதுதான் நம் நாட்டில் நடக்கிறது. அதுபோல் நாமே நியமனம் செய்கிறோம். நியமனம் செய்தவர்கள் எல்லாம் நீதான் தலைவர் என்கிறார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications