அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம் - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு
சென்னை: அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்து ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். அதிமுகவினர் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா மரணத்துக்கு பின் முதலமைச்சராக பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம். சசிகலாவுக்கு எதிராக நடத்திய தர்ம யுத்தத்தை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். நான்கு ஆண்டுகள் ஆட்சி நீடித்தது. ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்தனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க கடந்த ஜூன் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது. அப்போது ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் இடையே வெடித்த மோதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. அதன் விளைவாகவே முதல் பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு இரண்டாவது பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தன்னை பொதுச்செயலாளராக நியமனம் செய்ய வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த பதவியை கோர்ட் படியேறி தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம் அதிமுகவில் புதிய அமைப்பு செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டார். கேபி முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகிய இருவரும் அதிமுகவின் துணை பொதுச்செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அமைப்புச்செயலாளர்கள்
புதிய அமைப்பு செயலாளர் பட்டியலில் செல்லூர் ராஜு, சிவி சண்முகம், தனபால், கேபி அன்பழகன், காமராஜ், கடம்பூர் ராஜு, கே டி ராஜேந்திர பாலாஜி, ராஜன்செல்லப்பா மற்றும் பாலகங்கா ஆகியோர் உள்ளனர். அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த பொன்னையன் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் பதவியில் இருப்பார் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

ஓ.பன்னீர் செல்வம்
இந்த பொதுக்குழு கூட்டங்களுக்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் இருக்கும் மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை பெற்றார். அதன் தொடர்ச்சியாகவே அவர் பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றார்.

பண்ருட்டி ராமச்சந்திரன்
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் தான் ஒருங்கிணைப்பாளராக நீடிப்பதாக கூறி புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு அளித்த முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்தினை அதிமுகவின் அரசியல் ஆலோசகராக நியமித்து உத்தரவிட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்
கடந்த 1934 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பிறந்த ராமச்சந்திரன், 5 முறை எம்.எல்.ஏவாகவும் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில் 4 முறை அமைச்சராகவும் இருந்தவர். திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளில் பயணித்தவர். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது உடன் இருந்த முக்கிய தலைவர்களில் இருவரும் ஒருவராக இருந்தவர்.

முன்னாள் அமைச்சர்
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு பல கட்சிகள் மாறி பயணித்த பண்ருட்டி ராமச்சந்திரன் தற்போது மீண்டும் அதிமுகவின் அரசியல் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், கழகப் பொருளாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் முக்கிய அறிவிப்பு - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன், B.E., (Hons) அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அதிமுகவினர் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications