பரபரக்கும் பரந்தூர்.. நிலம் வழங்கியவர்கள் வெளியூர்காரர்களாம்! போராட்டத்தை அறிவித்த போராட்டக் குழு
சென்னை: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு பணிகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அந்தத் திட்டத்திற்கு பத்திரப்பதிவு துவங்கியுள்ளது. 19 நில உரிமையாளர்கள் வழங்கிய 17 ஏக்கர் நிலத்தை வழங்கி உள்ள நிலையில் அவர்களுக்கு 9 கோடியே 22 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெளியூர் வியாபாரிகளிடம் இருந்துதான் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும், தமிழக அரசின் இந்த போக்கை கண்டித்து வரும் 13-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் பரந்தூர் போராட்ட குழு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கை காரணமாக புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தும் பணிகளை துவக்கியது. ஆனால் தங்கள் பகுதியில் விமான நிலையம் வரக்கூடாது என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என உறுதியாக இருக்கும் தமிழக அரசு அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான பத்திரப்பதிவு காஞ்சிபுரத்தில் தொடங்கியது. முதற்கட்டமாக நேற்று 19 நில உரிமையாளர்கள் 17 இயக்க நிலங்களுக்கு பத்திர பதிவு செய்த நிலையில் அவர்களுக்கு 9 கோடியே 22 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் விமான நிலையம் அமைக்க பூர்வாங்க பணிகள் தொடங்கி இருக்கும் நிலையில் மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில் 21 குழுக்கள் அமைக்கப்பட்டு இழப்பீட்டுத் தொகையும் அறிவிக்கப்பட்டு ஜூன் இறுதியில் தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது. இந்த நிலையில் காஞ்சிபுரம் இணை சார்பாக பதிவாளர் அலுவலகத்தில் 17 ஏக்கர் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அன்றே அவர்களது வங்கி கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டு பத்திரப்பதிவு முடிக்கப்பட்டது.
இந்த நிலையில் வெளியூர் வியாபாரிகளிடம் இருந்துதான் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும், தமிழக அரசின் இந்த போக்கை கண்டித்து வரும் 13-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் பரந்தூர் போராட்ட குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," பரந்தூர்புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து மாநில அரசு திட்டத்தை கைவிட வேண்டி கடந்த மூன்று வருடங்களாக போராடி வரும் நிலையில் விவசாய மக்களிடம் எந்த விதமான கலந்தாய்வு கூட்டங்களையும் நடத்தாமல், முறையான ஆய்வுகள் எதையும் நடத்தாமல்,விவசாய நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடுவது, பண மதிப்பீட்டிற்கான அரசாணை வெளியிடுவது போன்ற தவறான முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

தமிழ்நாடு அரசு இது போன்ற எந்த விதமான பூச்சாண்டி காட்டினாலும் பரந்தூர் பகுதி விவசாய மக்கள் ஒரு பிடி நிலத்தையும் கொடுக்க மாட்டார்கள் என்பதை நன்கு உணர்ந்த மாவட்ட நிர்வாகம் நேற்று பரந்தூர் பகுதியில் நிலத்தில் முதலீடு செய்துள்ள வெளியூர் வியாபாரிகளை மாவட்ட நிர்வாகம் வாகன மற்றும் உணவு ஏற்பாடு செய்து அழைத்து வந்து வலுக்கட்டாயமாக அவங்களுடைய நிலங்களை பத்திர பதிவு செய்து வருகின்றனர்.
இதன் மூலம் பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்காக பரந்துர் பகுதி விவசாய மக்கள் நிலங்களை கொடுக்க முன்வந்து விட்டனர் என்ற மாய தோற்றத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு முயற்சிப்பதை பரந்தூர் பகுதி விவசாய மக்கள்ஒருபோதும் மன்னிக்க மாட்டார்.
ஜனநாயக படுகொலை செய்யும் தமிழ்நாடு அரசுக்கும், விவசாயிகளின் கண்ணீருக்கு காரணமாக இருக்கும் காஞ்சி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களை கண்டித்தும் போராட்ட குழுவின் சார்பாக வருகின்ற 13..07.25 ஞாயிறுக்கிழமை காலை10 மணிஅளவில் ஏகனாபுரம் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே அனைத்து கிராம விவசாயிகள் பெருமக்களும்ஓர் அணியாய் திரண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதால் பத்திரிக்கைகள் செய்திகள் மற்றும் அனைத்து ஊடக பிரிவு நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்த வேண்டுமென அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications