விஜய் எதிர்த்த.. பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? காத்திருக்கும் கேள்விகள்!
சென்னை: பரந்தூரில் 2வது விமான நிலையம் அமைப்பதற்கு விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். கடைசி வரை மக்களுடன் நிற்பேன் என்று வாக்கு கொடுத்திருந்தார். இந்நிலையில் விஜய் முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் நிலையில், தன்னுடைய வாக்குறுதியை அவர் நிறைவேற்றுவாரா? என்பது குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன.
சென்னையில் ஏற்கனவே ஒரு விமான நிலையம் இயங்கி வருகிறது. ஆனால், இந்த விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் குறைவு என்பதால், புதியதாக ஒரு விமான நிலையத்தை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பரந்தூர் விமான நிலைய திட்டம்
எல்லாம் ஓகேதான்.. இருப்பினும் இதற்காக ஒதுக்கப்பட்ட இடம்தான் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. மொத்தம் 5320 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். இதற்காக கடந்த 2023ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடங்கின.
மக்களின் எதிர்ப்பு
இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தனர். பொதுவாக ஒருவர் தானாக முன் வந்து விற்கும் நிலத்திற்கும், அவரிடமிருந்து பிடுங்கப்படும் நிலத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன. அரசு நிலத்தை கையகப்படுத்தப்படும்போது வழங்கப்படும் இழப்பீடு என்பது, பல ஆண்டுகளாக அந்த நிலம் அளித்த பாதுகாப்புக்கு ஈடாகாது. எனவே பரந்தூர் மக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வெடித்த போராட்டம்
சூழலியலாளர்களும் நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை விளக்கினர். புதிய விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நீர் நீலைகள் அதிகம் இருக்கின்றன. இதனை அழித்துவிட்டு விமான நிலையம் எதற்காக கட்டப்பட வேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இவை அனைத்தையும் மீறி அரசு நிலங்களை கையகப்படுத்த தொடங்கியது. 1300 ஏக்கர் வரை நிலம் கைப்பற்றப்பட்டது. மறுபுறம் மக்கள் போராட்டம் வெடித்து கிளம்பியது. பல்வேறு தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
விஜய் அளித்த வாக்குறுதி
அதில் விஜய்யும் ஒருவர். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பின்னர், விஜய் நடத்திய போராட்டங்களில், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போரட்டமும் ஒன்று. பரந்தூர், வளத்தூர், மடப்புரம் என மொத்தம் 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு விஜய் நம்பிக்கை அளித்திருந்தார். மக்கள் மத்தியில் பேசிய அவர்,
"உங்களுடன் நான் இறுதி வரை நிற்பேன். இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டப் போராட்டத்தையும் நடத்த தயங்க மாட்டேன். விமான நிலையம் வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் மக்கள் அதிகம் வாழும் இடங்களில் வரவேண்டாம் என்றுதான் சொல்கிறேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது" என்று கூறியிருந்தார்.
விஜய் என்ன செய்யப்போகிறார்?
மட்டுமல்லாது எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளும் கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பு என்கிற நிலையை திமுக எடுத்திருக்கிறது என்றும் விமர்சித்திருந்தாார்.
இப்போது விஜய் தலைமையில் ஆட்சி அமைய இருக்கிறது. எனவே பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அவர் ரத்து செய்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications