பரந்தூர் விமான நிலைய திட்டம்.. கையகப்படுத்தப்பட்ட ஆயிரம் ஏக்கர் நிலம்.. அறிவித்த வருவாய்த் துறை!
சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நிலத்தை வழங்கிய உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.400 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு, விமான நிலையத் திட்ட மதிப்பு ரூ.29,150 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
சென்னையின் 2வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மொத்தமாக பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. கடந்த 3 மாதங்களாகவே இதன் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த 5,746 ஏக்கர் நிலத்தில் சுமார் 3,774 ஏக்கர் நிலம் தனியார் வசம் உள்ளது. இதனால் வருவாய்த் துறை தரப்பில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. கடந்த மாதம் வரை 540 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதாக வருவாய்த் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தீவிரமாக எதிர்த்து வருகின்றனர்.
கடந்த மாதம் கூட 15வது முறையாக பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு இறுதிக்குள் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை முடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்தால் மட்டுமே, அடுத்த ஆண்டு கட்டுமான பணிகளை தொடங்குவதற்கான டெண்டர் பணிகள் தொடங்கப்படும். ஏற்கனவே ஏற்பட்ட தாமதம் காரணமாக 2028ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டிய முதற்கட்ட பரந்தூர் விமான நிலைய பணிகள், 2030ஆம் ஆண்டுக்கு தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது.
இந்தப் பணிகள் முடிவடைந்த பின், அடுத்த 3 கட்ட பணிகள் 2046ஆம் ஆண்டு வரை இழுத்துக் கொண்டே செல்லும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்காக இதுவரை ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நிலத்தை வழங்கிய உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.400 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் விமான நிலையத் திட்ட மதிப்பு ரூ.29,150 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வருவாய்த் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் பரந்தூர் விமான நிலையப் பணிகள் கூடுதல் வேகம் எடுக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications