கோயம்பேடு.. ஆம்னி பேருந்துகளுக்கு ஹைகோர்ட் கிரீன் சிக்னல் .. அரசு பேருந்துகளையும் இயக்க கோரிக்கை
சென்னை: ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு முனையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கே உத்தரவு கிடைத்துள்ள நிலையில், அரசு பேருந்தகளையும் கோயம்பேட்டிலிருந்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் செல்லும் மக்களின் வசதிக்காகவும், சென்னைக்குள் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சென்னையின் புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்ட கடந்த ஜனவரியில் பயன்பாட்டுக்கு வந்தது.

இப்பேருந்து முனையத்தில் 2,000க்கும் அதிகமான பேருந்துகள் வரை வந்து செல்லும், இது தவிர 270 கார்கள், 3,500 பைக்குகள் பார்க் செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக தென் மாவட்டங்களுக்கு அதிக அளவிலும், மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு குறைவான அளவில் பேருந்துகளும் இயக்கப்படும். அதன் பின்னர் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேபோல ஆம்னி பேருந்துகளும் ஜனவரி 24ம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், 'இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணையில், தமிழக அரசு சார்பில் "ஆம்னி பேருந்துகளின் கேரேஜ்கள் கோயம்பேட்டில் இருப்பதால், தற்போதைக்கு சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும். பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கிவிட மட்டும் அனுமதி வழங்கப்படும்" என விளக்கமளிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, "சென்னைக்கு உள்ளேயே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கினால், பேருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கு முன்னதாகவே இருக்கைகள் நிரம்பிவிடும். எனவே கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் கொண்டு வந்ததன் நோக்கமே வீணாகிவிடும்" எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஆம்னி பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்ட வழித்தட வரைபடத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை பிப்.9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்" என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், "போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது" என்று தனது உத்தரவில் தெளிவுப்படுத்தியுள்ளது.
எனவே வார இறுதி விடுமுறை நாட்களில், ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊருக்கு செல்வோர் கோயம்பேடு ஆம்னி பேருந்து முனையத்திலிருந்தே செல்ல முடியும். கிளாம்பாக்கம் வரை போக வேண்டிய அவசியமில்லை. ஆனால், தனியார் பேருந்துகளே கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும்போது, ஏன் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளை கோயம்பேட்டிலிருந்து இயக்க கூடாது என பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இன்றும், நாளையும் வார விடுமுறை என்பதால் ஏராளமான பயணிகள் நேற்றிரவு சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குவிந்தனர். ஆனால் அங்கு போதுமான பேருந்துகள் கிடைக்காததால் பயணிகள் சென்னை-திருச்சி சாலை மறியலில் ஈடுபட்டனர். கோயம்பேட்டிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டபோது இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டது கிடையாது என்றும், தனியார் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்த இயக்கப்படும்போது அரசு பேருந்துகளும் அங்கிருந்து இயக்கினால் என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications