பல்லாவரம் ரயில் நிலையத்தில் படபடவென கேட்ட சத்தம்! பீதி அடைந்த ஏசி மின்சார ரயில் பயணிகள்.. என்னாச்சு
சென்னை: சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்துக்கு ஏசி மின்சார ரயில் வந்தபோது திடீரென படபடவென சத்தம் கேட்டது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் விபத்து நேரிட்டதோ என பயந்து அதிர்ச்சியடைந்தனர். சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் உரசியதால் தான் இந்த சத்தம் கேட்டது தெரியவந்தது. இதையடுத்து ஊழியர்கள் சுத்தியலால் உடைத்து சரி செய்தனர். ஏசி மின்சார ரயில் பயன்பாட்டுக்கு வந்த ஒரே மாதத்தில் நடைமேடையில் உரசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் போக்குவரத்தின் இதய நாடியாக இருப்பது புறநகர் மின்சார ரயில்கள் என்றால் மிகையல்ல. அதிலும் சென்னை பீச் டூ செங்கல்பட்டு ரூட்டில் தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகளின் பயண தேவையை புறநகர் மின்சார ரயில்கள் தீர்த்து வைக்கிறது. தாம்பரம், செங்கல்பட்டு ரூட்டில் தினமும் 240- க்கும் மேற்பட்ட சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

திடீரென வந்த சத்தம்
சென்னை பீச் - செங்கல்பட்டு ரூட்டில் ஏசி ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். வெயில் காலங்களில் கடுமையான வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என்பதால், ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பயணிகள் முன்வைத்து இருந்தனர். பயணிகள் இந்த கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் முதல் ஒரு ஏசி ரயில் இயக்கப்படு வருகிறது.
சென்னையில் ஏசி மின்சார ரயில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை பீச் முதல் செங்கல்பட்டு வரை இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று வழக்கம் போல சென்னை கடற்கரை நோக்கி வந்துகொண்டிருந்தது. ரயில் பல்லாவரம் ரயில் நிலையம் வந்தது. அப்போது ரயில் நிலைய பிளாட்பார்மில் உரசிக்கொண்டு சென்றது.
திடீரென சத்தம் கேட்டதால் அச்சம் அடைந்த பயணிகள், ரயில் நிலைய நடைமேடையில் ரயில் உரசிக்கொண்டு செல்வதை கவனித்தனர். உடனடியாக ரயிலின் லோகோ பைலைட்டிற்கு இந்த தகவலை தெரிவித்தனர். உடனே ரயில்வே லோகோ பைலட்டும் ரயிலை நிறுத்தினர். ரயில் நிலைய நடைமேடையில் ரயில் உரசி செல்வது குறித்த தகவல் ரயில்வே அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
நடுவழியில் நின்ற மின்சார ரயில்கள்
உடனே அங்கு வந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ரயிலை இயக்கி காட்ட அறிவுறுத்தினர். இதன்படி, ஏசி மின்சார ரயில் முன்னும் பின்னும் இயக்கி பார்க்கப்பட்டது. அப்போது நடைமேடையில் உரசுவது தெரிந்ததால், சுத்தியலை கொண்டு நடைமேடையை உடைத்து சரி செய்தனர். சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த பணிகள் நீடித்த நிலையில், ரயில் நடைமேடையில் உரசாமல் சென்றது.
பல்லாவரம் ரயில் நிலையத்தில் இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, ஏசி மின்சார ரயில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பல்லாவரத்தில் நிறுத்தப்பட்டதால், சென்னை தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து பீச் நோக்கி வந்த மின்சார ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. திடீரென ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் ரயில் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
ரயில் நிலையங்களில் கூட்டம்
அதேபோல, கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயிலுக்கு காத்திருந்த பயணிகளும் திண்டாடிப்போகினர். செல்போனில் நேரத்தையும் தண்டவாளத்தையும் பார்த்தபடி ரயிலை எதிர்நோக்கி அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்துக்கிடந்தனர். ரயில் தாமதத்தால், கிண்டி, மாம்பலம், நுங்கம்பாக்கம், எக்மோர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஏராளமானவர்கள் ரயிலுக்கு காத்திருந்து வெறுத்து போய், மெட்ரோ ரயில்களிலும் பேருந்துகளுக்கும் சென்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் வழக்கமாக பயணிகள் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது என்றும் இதே வார நாட்கள் என்றால் திண்டாட்டம்தான் என்று பயணிகள் ஆதங்கப்படனர்.

பயணிகள் அதிர்ச்சி
சென்னையில் ஏசி மின்சார ரயில் சேவை, கடந்த ஒரு மாதமாக இதே ரூட்டில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், திடீரென பல்லாவரம் ரயில் நிலையத்தில் நடைமேடையில் உரசுவதற்கு காரணம் என்ன? என்பது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அனைத்து சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட புதிய ஏ.சி.மின்சார ரயில் நடைமேடையில் உரசியபடி சென்ற சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications