சென்னை எழும்பூர் ரயில்வே உதவி மையங்களில் தமிழ் தெரியாதவர்களால் அவதிப்பட்ட பயணிகள்.. என்ன நடந்தது?
சென்னை: புயல் பாதிப்பால் பல ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. இது தெரியாமல் நேற்று மாலை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். ரயில் நிலையத்தில் உள்ள உதவி மையத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் எப்போது வரும் என்ற விவரம் கேட்டனர். ஆனால் உதவி மையத்தில் இருந்தவருக்கு தமிழ் தெரியாததால் பயணிகளுக்கும், ரயில்வே ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பெஞ்ஜல் புயல் காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
ரயில் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட நேரத்தில் சரியான அறிவிப்பு ஏதும் வழங்கவில்லை எனவும், தண்ணீர், உணவுக்கு எந்த ஏற்பாடும் ரயில்வே நிர்வாகம் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது ஒருபுறம் எனில் நேற்று மாலை சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். ரயில் நிலையத்தில் உள்ள உதவி மையத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் எப்போது வரும் என்ற விவரம் கேட்டார்கள். உதவி மையத்தில் இருந்தவருக்கு தமிழ் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் யணிகளுக்கும், ரயில்வே ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
முன்னதாக விழுப்புரத்தை அடுத்துள்ள விக்கிரவாண்டி-முண்டியம்பாக்கம் இடையே ரயில்வே பாலத்தை தாண்டி வெள்ளம் சென்றதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில்களும், சென்னையில் இருந்து சென்ற ரயில்களும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.
கன்னியாகுமரி, மதுரை (பாண்டியன் எக்ஸ்பிரஸ்) செங்கோட்டை (பொதிகை எக்ஸ்பிரஸ்), கொல்லம் (அனந்தபுரி எக்ஸ்பிரஸ்), தூத்துக்குடி (முத்துநகர் எக்ஸ்பிரஸ்), திருநெல்வேலி ஆகிய பகுதியில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு எழும்பூர் வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஒரு கட்டத்தில் ரயில்களை விழுப்புரத்தில் இருந்து காட்பாடி, அரக்கோணம் வழியாக எழும்பூருக்கு இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே மாற்றி அறிவித்தது.
திருச்செந்தூரில் இருந்து எழும்பூர் புறப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வந்த சிறப்பு ரயில் திருச்சியிலும் நிறுத்தப்பட்டன. திருச்சி (சோழன் எக்ஸ்பிரஸ்), மதுரை (தேஜஸ் எக்ஸ்பிரஸ்), குருவாயூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரை (வைகை எக்ஸ்பிரஸ்), காரைக்குடி (பல்லவன் எக்ஸ்பிரஸ்), திருச்சி (சோழன் எக்ஸ்பிரஸ்) இருமார்க்கமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்டது.
இதேபோல் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் ரயிலும், எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரயிலும், நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் வந்தே பாரத் ரயிலும் நேற்று ரத்து செய்யப்பட்டன. எழும்பூரில் இருந்து புதுச்சேரி, மன்னார்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரயிலும், விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் வரும் ரயிலும் நேற்று இயக்கப்படவில்லை.
எழும்பூரில் இருந்து கொல்லம், மன்னார்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1 மணி நேரம் தாமதமாகவும், கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேரம் 10 நிமிடம் தாமதமாகவும், நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்பட்டது.
இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர். ரயில் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட நேரத்தில் சரியான அறிவிப்பு ஏதும் வழங்கவில்லை என ரயில்வே மீது குற்றம்சாட்டினார்கள்.












Click it and Unblock the Notifications