பட்டா மாறுதல்.. நில அளவை வரைபடமும் அவசியம்! இ பட்டாவில் அதிரடி மாற்றம்! சொத்து வாங்குவோருக்கு குஷி
சென்னை: பதிவுத்துறை, வருவாய்த்துறை டிஜிட்டல் முறையில் மாறிவிட்ட நிலையிலும்கூட, மோசடிகள் என்பது பெருக்கெடுத்து காணப்படுகிறது.. சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான பல்வேறு விஷயங்களுக்கு ஆன்லைன் முறையிலேயே ஏராளமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.. எனினும், கோரிக்கைகளுடன் விண்ணப்பதாரர்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்ல நேரிடும்போது, லஞ்ச புகார்கள் அதிகரிக்கின்றன.. அத்துடன், போலி ஆவணங்கள் மூலம் சொத்து அபகரிப்புகளும் நடக்கின்றன.. இவைகளுக்கெல்லாம் கடிவாளம் போடுவது போல புதிய நடைமுறையை வருவாய்த்துறை விரைவில் கொண்டு வரப்போவதாக கூறப்படுகிறது.. அதேசமயம், சொத்து பரிமாற்றங்களில் கவனமாக இருக்கும்படி அதிகாரிகளும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
சொத்து விற்பனையில் மோசடியை தடுப்பதற்காக அரசு பல்வேறு சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், இதில் மோசடி குறையவில்லை..

இதுகுறித்து அதிகாரிகள் சொல்லும்போது, "புதிதாக சொத்து வாங்கும்போது, அதில் பத்திரம் தொடர்பான உண்மை நிலவரத்தை முழுமையாக தெரிந்து கொண்டுவிட்டோம் என்று முடிவு செய்து, உடனே அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கிவிட வேண்டாம்..
வீடு, மனை போன்ற சொத்துக்களுக்கு பத்திரம் சார்ந்த விஷயங்களில் வில்லங்கம் எதுவும் இல்லாவிட்டாலும், பட்டா சார்ந்த பல்வேறு வில்லங்கம் வந்துவிடக்கூடும்.. எனவே, பட்டாவின் அசல் பிரதியையும், அதற்குரிய நில அளவை வரைபடத்தையும் கேட்டு பெற வேண்டும்.
நில அளவை வரைபடம் அவசியம்
ஒரு குறிப்பிட்ட சொத்துக்கு பட்டா இருக்கிறதென்றாலே, அதற்குரிய நில அளவை வரைபடம் நிச்சயம் தயாரித்து வழங்கப்பட்டிருக்கும்.. நிலம் தொடர்பான பட்டாக்களில் உரிமையாளர் பெயர், சர்வே எண், பரப்பளவு, வகைபாடு போன்ற விபரங்கள் இடம்பெற்றாலும், அதன் சர்வே எண், பரப்பளவு போன்றவற்றை தெளிவாக புரிந்துகொள்ள, நில அளவை வரைபடமும் அவசியமாகிறது.
வெறும் பட்டாவை மட்டுமே பார்த்து முடிவெடுப்பதால் எந்த பலனும் இல்லை.. கட்டாயம் வரைபடமும் வேண்டும்.. அப்போதுதான், 4 எல்லைகள், பரப்பளவு போன்றவற்றினையும் ஒப்பிட்டு பார்க்க முடியும்.
விஏஓ அலுவலகம் அணுகலாம்
சமீபகாலமாகவே, சர்வே எண் மற்றும் உட்பிரிவு வாரியாக வழங்கப்படும் பட்டாக்களுக்கு இணையாக, நில அளவை வரைபடமும் ஆன்லைனில் அப்லோடு செய்யப்படுகிறது. ஒருவேளை, ஆன்லைனில் நில அளவை வரைபடம் கிடைக்காதவர்கள், அவரவர் விஏஓவை அணுகி, வரைபடத்தினை பெற்றுக் கொள்ளலாம்.
ஏனெனில், பட்டாவுடன் இணையாக நில அளவை வரைபடத்தை ஆய்வு செய்தால்தான், அந்த சொத்தின் முழு விவரம் மட்டுமல்ல, அந்த சொத்தின் பிற விவரங்களும் தெரியவரும்" என்று அறிவுறுத்துகிறார்கள்.
பட்டா மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி
இதனிடையே, நில மோசடியை தடுக்க புதிய நடைமுறையை கொண்டுவரப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு உள்ளது என்பதை காட்டும் ஆவணமான இ-பட்டா, மின்னணு முறையில் தற்போது வழங்கப்படுகின்றன..
ஆனால், இந்த இ-பட்டாவுடன், ஆதார் நம்பரையும் போட்டோவையும் இணைத்து, ஆன்லைனில் வழங்கும் நடைமுறை, விரைவில் அமலுக்கு வரப்போகிறதாம். இ- பட்டாவில் புகைப்படம், ஆதார் எண் போன்றவற்றை இணைக்க அரசு முடிவு செய்துள்ளதால், இதன்மூலம் ஆள் மாறாட்டம், பட்டா மோசடிகள் நடக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்..
எனவே, இ-பட்டாக்களுடன், ஆதார் நம்பரையும் போட்டோவையும் இணைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறதாம்.
பட்டா விண்ணப்பிக்க வேண்டுமா?
பட்டா பெற விண்ணப்பிக்க வேண்டியவர்கள், அதிகாரப்பூர்வ இணையதளமான, eservices.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். நிலம் அமைந்துள்ள மாவட்டம், வட்டம், கிராமம் போன்ற விவரங்களை குறிப்பிட்டால், இ- பட்டாவை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.நில உரிமையாளர் மாறும் போது பட்டாவையும் மாற்றிக்கொள்ளலாம். இதற்கு ஆன்லைனில் tamilnilam.tn.gov.in என்ற முகவரியில் மட்டுமல்லாமல், தாசில்தார் அலுவலகத்தில் அல்லது இ சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications