ஒரே அடி.. "விவரம் இல்லாத முதல்வர்னு நீங்களே சொல்றீங்களா?".. ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு எவ வேலு பதிலடி
சென்னை: பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம் விவகாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு. "விவரம் இல்லாத முதலமைச்சர் என்று நீங்களே சொல்கிறீர்களா?" என எவ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் இ.பரந்தாமனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தீவிரமாக பிரச்சாரம் மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இடைத்தேர்தல் பணிகளுக்கு மத்தியில், தவெக அரசை கடுமையாக விளாசி இருக்கிறார் எ.வ.வேலு. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு வலுத்து வரும் சூழலில், அந்த முடிவில் இருந்து தவெக அரசு பின்வாங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தச் சூழலில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டும் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் இன்னும் முடிவெடுக்கவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கு, தனது அனுபவத்தால் பதில் கொடுத்துள்ளார் எ.வ.வேலு.
முதலமைச்சர் முடிவு எடுக்காமல் தான் அரசாணை வெளிவந்ததா? அரசாணை என்பது அரசின் கொள்கை முடிவு. அதனை விளையாட்டாக வெளியிட முடியுமா? எனக் கேள்வி எழுப்பி, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அறியாமையுடன் பேசுவதாகக் கடுமையாகச் சாடி இருக்கிறார்.
இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, "அரசாணை வெளியிட்டால் அதுதான் அரசின் கொள்கை. இதில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் அமைச்சரான பிறகும் அறியாமையில் இருக்கிறார்கள், விவரம் தெரியவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.
அரசாணை வெளியிடுவதற்கு முன்பு ஒரு அரசு பல வகைகளிலும் ஆராயும். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கவேண்டும் என்றால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும்? கடலுக்கு அருகில் அமைத்தால் அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்குமா? இவற்றை எல்லாம் சிந்தித்துப் பார்த்துத்தான் ஓர் அரசாணை வெளியிட முடியும்.
இது வேடிக்கை இல்லை. அரசாங்கத்தின் கொள்கை முடிவுதான் அரசாணையாக வரும். முதலமைச்சருக்கு தெரியாது என்று எப்படி சொல்ல முடியும்? முதல்வர் விஜய் தான் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தாரே.. அதன்பிறகு தானே அரசாணை வந்தது. அப்படியென்றால் விவரம் இல்லாத முதலமைச்சர் என்று நீங்களே சொல்கிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக சுற்றிச் சுழன்று பணியாற்றி வரும் எ.வ.வேலு, கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். இவரது தலைமையில் பல முக்கியமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் தற்போது தலைமைச் செயலகம் அமைக்கும் விவகாரத்தில் தவெக அரசின் நிலையை கடுமையாக விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
