"மாதம் ரூ.50 ஆயிரம் வேண்டும்!".. அழகுநிலைய உரிமையாளரிடம் மாமூல் கேட்ட பெண் எஸ்.ஐ. இருவர் கைது
சென்னை: சென்னை, திருமுல்லைவாயிலில் ஸ்பா மற்றும் அழகு நிலையம் நடத்தி வந்த பெண்ணிடம் மாதம்தோறும் மாமூலாக ரூ. 50 ஆயிரம் கேட்டு, ரூ.20,000 லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த ஜெனிபர் (30). இவர் திருமுல்லைவாயில் சி.டி.எச். சாலையில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூன் 20 ஆம் தேதி இந்த அழகு நிலையத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும், உரிய அனுமதியின்றி தொழில் நடத்தப்படுவதாகவும் கூறி திருமுல்லைவாயில் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி தலைமையிலான போலீஸார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, திடீரென கடையை மூடிவிட்டு காவல் நிலையத்திற்கு வந்து பேசுங்கள், அதன் பிறகே தொடர்ந்து தொழில் நடத்த முடியும் என்று போலீஸார் கூறிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மறுநாள் காவல் நிலையத்திற்கு ஜெனிபர் சென்றுள்ளார். அப்போது, ஸ்பா மற்றும் அழகு நிலையத்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து நடத்த வேண்டுமெனில் மாதம்தோறும் ரூ. 50,000 மாமூல் வழங்க வேண்டும் என்று சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அமுல் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி ஆகியோர் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால், கடும் மன உளைச்சளுக்கு ஆளான ஜெனிபர் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறையில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஆலோசனைப்படி, மாதம் ரூ. 20,000 வழங்க சம்மதிப்பதாக போலீசாரிடம் ஜெனிபர் தெரிவித்தார். பின்னர் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஜெனிபரிடம் வழங்கப்பட்டு, திட்டமிட்டபடி காவல் நிலையத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அமுலிடம் ஜெனிபர் ரூ.20,000 பணத்தை வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உடனடியாக சோதனை நடத்தி அமுலை கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சப் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமியையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications