தடுத்த ஆரிய வந்தேறிகள்.. தமிழர்களை எழுத வைத்து விடியல் தந்த கருணாநிதி பேனா -கார்த்திகேய சிவசேனாபதி
சென்னை: ஆரிய வந்தேறிகள் நமது மொழி, கலாச்சாரம், பண்பாடு சாமானியருக்கான கல்வியை தடுத்து நிறுத்திய போது தமிழ் நாட்டில் உள்ள அனைவரையும் பேனா பிடித்து எழுதுவதற்கு வாய்ப்பினை வழங்கியவர் கருணாநிதி என்றும், இதுபோன்ற காரணங்களால்தான் கருணாநிதிக்கு அவர்களுக்குப் பேனா வடிவில் நினைவுச் சின்னம் எழுப்ப உள்ளதாக திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கும் அவர், கலைஞரின் பேனாவிற்குச் சிலை எதற்கு என்று கேட்கும் தங்களுக்கு... மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் தொல்காப்பியத்தை எழுதிய இந்த சமுதாயம்...
இரண்டாயிரத்து அறுநூறு வருடங்களுக்கு முன்பு சங்க இலக்கியத்தை உருவாக்கிய இந்த சமுதாயம்... இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு திருக்குறளை உருவாக்கியது இந்த சமுதாயம்.

நம்மை எழுத வைத்தது கருணாநிதி பேனா
பின் நாட்களில் டெல்லியிலிருந்து வந்தவர்களுக்கு அடிமையாக மாறி 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு இருந்த நிலையைப் போல பல நூறு வருடங்களுக்கு முன்பு ஆரிய வந்தேறிகள் நமது மொழி, கலாச்சாரம், பண்பாடு சாமானியருக்கான கல்வி இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்திய போது தமிழ் நாட்டில் உள்ள அனைவரையும் பேனா பிடித்து எழுதுவதற்கு வாய்ப்பினை வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.

பெரியார், அண்ணா வழிவந்தவர்
தந்தை பெரியார் , அறிஞர் அண்ணா வழியில் வந்தவர் கலைஞர் அவர்கள். உங்களைப் போல என்னைப் போல ஆடு மாடு மேய்த்துக் கொண்டு விவசாயம் செய்து கொண்டிருந்த எல்லாரையும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக மாற்றி அரசாணை வெளியிட்டபொழுது ஒரு பேனாவை வைத்து கையெழுத்துப் போட்டிருப்பார் அல்லவா அதற்காகவும் தான் பேனாவைச் சிலையாக நினைவாக வைக்க விரும்புகிறோம்.

அருந்ததியர் உள் ஒதுக்கீடு
நமது பகுதியைச் சார்ந்த அருந்ததியர் சமுதாயத்திற்கு 18 சதவீதம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தாலும் அந்த அருந்ததியர் சமுதாயத்திற்கு அது பயன்படுவதில்லை என்பதை அறிந்த கலைஞர் அவர்கள் மூன்று சதவீத உள் ஒதுக்கீடு வழங்கினார் அல்லவா? அப்பொழுது அந்த பேனாவில் கையெழுத்துப் போட்டிருப்பார் அல்லவா? அதனைப் போற்றும் வண்ணம் நினைவாகப் பேனா சிலை வைக்க விரும்புகிறோம்.

தமிழனின் வாழ்க்கையை மாற்றிய பேனா
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த பேனாவை வைத்து எப்படி ஒவ்வொரு தமிழனுடைய வாழ்க்கையை மாற்றிப் போட்டதற்கு அந்த பேனா தான் காரணம். 2006 ஆம் வருடம் எங்கள் பகுதியில் வாழ்ந்து வந்த பல விவசாயி குடும்பங்கள் தோட்டத்தை விற்று விட்டு எங்காவது சென்று விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது, 7000 கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்து பல லட்சம் விவசாயிகள் வாழ்வதற்கு வழி வகுத்தது அந்த பேனா.

தமிழ் சமுதாயத்தின் விடிவு
தென்னை நல வாரியம் அமைத்தது அந்த பேனா. வாய்க்கால் தண்ணீர் இருந்து வருகின்ற நீருக்கு தண்டத்தீர்வை ரத்து செய்தது அந்த பேனா, பெண்களுக்குச் சொத்துரிமைகளைப் பெற்றுத் தந்தது அந்த பேனா, இப்படி பல்லாயிரம் விடயங்களை இந்த தமிழ் சமுதாயத்திற்கு விடியலுக்காக மாற்றியது அந்த பேனா.

சரித்திரம் படித்திருக்க வேண்டும்
ஆகையால் தான் கலைஞர் அவர்களுக்குப் பேனா வடிவில் நினைவுச் சின்னம் எழுப்ப உள்ளோம். இதை எல்லாம் புரிந்து கொள்வதற்குச் சரித்திரம் படித்திருக்க வேண்டும். சரித்திரம் ஏன் இவ்வளவு பெரிய ஒரு உயர்ந்த தலைவர்களுக்கு ஆண்டவர்களுக்குச் சிலை வைக்கிறது என்று எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications