சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பென்னிகுவிக் சிலை! – லண்டனில் தமிழ்க் கொடியை பறக்கவிட்ட மு.க.ஸ்டாலின்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இந்திய அரசியல் களத்தில் தனித்துவமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்' என்பது வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல. இங்கு வந்தவர்களை தமிழர்கள் வாழவைத்தாலும் தங்களை வாழவைத்தவர்களையும் அவர்கள் தெய்வத்துக்கு நிகராகவே வழிபடுகின்றனர். அதற்குச் சரியான சான்று பென்னிகுவிக்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பொறியாளராக இருந்த பென்னிகுவிக், தென் தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தளவில் ஒரு காவல் தெய்வம். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதியன்று, அவரது பிறந்தநாளை மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயப் பெருங்குடி மக்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடுகின்றனர்.

முளைப்பாரி சுமந்து அவருக்கு நடத்தப்படும் நேர்த்திக்கடன் காலம்காலமாக தமிழ் மண்ணில் கடைபிடிக்கப்பட்டு வரும் சடங்குகளில் ஒன்று. அணையைக் கட்டிய அந்த ஆங்கிலேயப் பொறியாளருக்குப் பொங்கல் விழா என்பது அயல்நாட்டுக் கலாசாரத்தில் காண முடியாத அற்புதம்.

இதன் நீட்சியாக, இந்திய அரசியலில் நிகழாத ஓர் அதிசயத்தை அரங்கேற்றிக் காட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆங்கிலேய பொறியாளருக்கு, அவர் பிறந்த லண்டன் மண்ணில், தமிழ்நாடு அரசு சார்பாக நிலை நிறுவ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி அந்தக் கனவு ஈடேறப் போகிறது.

இதற்காக லண்டன் ரயில் நிலையங்களில் இலண்டனில் இயங்கும் கேம்பர்ளி தமிழ்ச் சங்கம் சார்பில் மிகப் பிரமாண்டமாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 'வேறு நாட்டைச் சார்ந்த விழா ஒன்றுக்கு இதுபோன்ற விளம்பரங்கள் செய்யப்படுவது இதுவே முதன்முறை' என்று கூறப்படுகிறது.

அமித் ஷாவை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்! பக்கத்திலேயே 2 பேருக்கும் இருக்கைகள்! என்ன பேசினார்கள்? அமித் ஷாவை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்! பக்கத்திலேயே 2 பேருக்கும் இருக்கைகள்! என்ன பேசினார்கள்?

'கனவு நாயகன்' பென்னி குவிக்

'கனவு நாயகன்' பென்னி குவிக்

1895 ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே பஞ்சத்தைப் போக்கி தரிசு நிலத்தை பொன்விளையும் பூமியாக மாற்றுவதற்கு பென்னிகுவிக் முயற்சி எடுத்தார். அதன் சாட்சியாக இன்றும் முல்லைப் பெரியாறு அணை உறுதியாக நிற்கிறது. இந்த அணையின் நீரானது, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வேளாண் நிலங்களை பசுமையாக்கியதுடன் அம்மக்களின் குடிநீர்த் தேவைகளையும் பூர்த்தி செய்தது. இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் 2 லட்சம் ஏக்கர் நிலங்களில் சாகுபடி நடந்து வருகிறது.

கருணாநிதி செய்த கௌரவம்

கருணாநிதி செய்த கௌரவம்

தமிழக முதலமைச்சராக கருணாநிதி பதவி வகித்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி மதுரை தல்லாகுளத்தில் உள்ள பொதுப்பணித்துறை வளாகத்துக்குள் பென்னிகுவிக்குக்கு சிலை ஒன்றை நிறுவினார்.
அதன் தொடர்ச்சியாக, கூடலூர் லோயர் கேப் பகுதியில் மணிமண்டபம் ஒன்றும் திறக்கப்பட்டது.

தமிழ் மண்ணின் அடையாளமாகக் கொண்டாடப்பட்டு வரும் குவிக்கை திமுக தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வந்துள்ளது. அன்று மதுரையில் பென்னிகுவிக்குக்கு, கருணாநிதி சிலையை வைத்தார். இன்று அவரது மகன் ஸ்டாலின் லண்டனிலுள்ள குவிக் பிறந்த ஊரான கேம்பர்ளி பூங்காவில் அவரது சிலையை அமைக்க உள்ளார். விரைவில் இந்த விழா களைகட்டப் போகிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வு குறித்து வரலாற்று ஆய்வாளர் சுந்தர வந்தியத்தேவனிடம் பேசினோம். அவர் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

வரலாறு சொல்வது என்ன?

வரலாறு சொல்வது என்ன?


"தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. ஓர் அணையைக் கட்டி நமது வாழ்வாதாரம் உயர உதவிய அதிகாரிக்குத் தமிழக மக்கள் இன்றும் நன்றியுடன் உள்ளனர். ஆகவே, சிலை நிறுவும் முயற்சியை நான் வரவேற்கிறேன்.

வெள்ளையர் ஆட்சியில் மக்களை அடக்கி ஒடுக்கிய அதிகாரிகளுக்கு ஏராளமான சிலைகளை பிரிட்டிஷ்அரசு இந்தியாவில் நிறுவியது.
ஆனால் தமிழக அரசோ ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஓர் உண்மையான அதிகாரிக்கு அவர் பிறந்த மண்ணில் சிலை வைக்க முன்வந்துள்ளது. இந்த வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் நலனுக்காக வாழ்ந்த வரலாற்று நாயகன்தான் பென்னி குவிக்.

குறிப்பாக, முல்லைப் பெரியாறு அணையின் சிறப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வழக்கமாக ஓடிக்கொண்டிருக்கும் நதியை குறுக்கே தடுத்து அணையைக்கட்டுவது எளிது. ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கும் திசைக்கு எதிராக அதை திருப்பி வேறு பக்கத்தில் அணையை எழுப்புவது என்பது வேறு.
பென்னிகுவிக் அந்தச் சாதனையைத்தான் செய்துள்ளார். பஞ்சத்தின் விளைவாக இந்த அணையைக் கட்டுவதற்கு பென்னிகுவிக் முயற்சி எடுத்தார். மிகுந்த அர்ப்பணிப்புடன் அணையை கட்டினார். ஆகவேதான் தமிழ் மக்கள் அவரை வழிபடுகிறார்கள். அவருக்குச் சிலை வைப்பது நம் கடமை" என்கிறார்.
அணையைக் கட்டினார் என்பது முக்கியமானது அல்ல. இந்த அணையைக் கட்டிக் கொண்டிருக்கும் போது கடும் வெள்ளம் ஏற்பட்டதால் பணிகளைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை. பிரிட்டீஷ் அரசு சோர்வுற்று நிதி ஒதுக்குவதை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் தனது கனவு எந்தக் காரணத்தாலும் தடைப்பட்டு நின்றுவிடக் கூடாது என நினைத்த குவிக், தனது சொந்த நாடான லண்டனுக்குப் புறப்பட்டார்.
அங்கே தனக்கு இருந்த நகைகள், மற்றும் சொத்துகளை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு வந்து தடைப்பட்ட அணையின் பணிகளை மீண்டும் தொடர்ந்தார் என ஒரு வாதம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. அப்படி தமிழ் மக்களின் நலனுக்காகத் தனது உடைமைகளை விற்று அணையைக் கட்டினார் என்பதற்காகவே தென் தமிழக மக்கள் அவரைக் காலம்காலமாக வழிபட்டு வருகிறார்கள் என்பதை இங்கே நாம் அழுத்தம் திருத்தமாக கூற தோன்றுகிறது.

தமிழ் அடையாளம், தமிழர் அரசியல் எனத் தொடர்ந்து இயங்கி வரும் பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதனிடம் பேசினோம். அவரது பார்வை வேறு சில தகவல்களை முன்வைத்தது.

"இயல்பாக ஒரு நாடு பழைய உறவின் அடிப்படையில்தான் தங்களின் எதிர்காலத்துக்கான ஒரு பொருளாதார, கலாசார உறவை உருவாக்க முடியும். முன்பு திருவள்ளுவரை முன்வைத்து அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் இருக்கை அமைப்பது, சிலை நிறுவுவது என சில முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. இவை நம் கலாசாரத்தை வெளியில் கொண்டு செல்வதற்கான முயற்சிகள்.

ஆனால் பென்னி குவிக் ஓர் அயல்நாட்டுக்காரர். அவர் தமிழ் மண்ணுக்கென்று சில நன்மைகளைச் செய்துள்ளார். ஆகவே குவிக்கின் பணியை பெருமைப்படுத்துகிறோம். இதற்காக தமிழ்நாடு அரசு சிலை அமைப்பது என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இந்த நிகழ்வு தமிழர்களுக்கும் உலக தமிழர்களுக்கும் முக்கியமான ஒன்றாக நான் பார்க்கிறேன்.

இந்தியாவுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையேயான உறவு என்பது வேறு. அதில் ஆங்கிலேயர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள உறவு பற்றிப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.

உலகப் பண்பாட்டு அரங்கில் தமிழ்நாடு

உலகப் பண்பாட்டு அரங்கில் தமிழ்நாடு

உலக அரசியலில் Hard power and Soft power என்று இரண்டுவிதமான போக்குகள் உள்ளன. Hard power என்பது அணு ஆயுதங்களை வைத்து பிறநாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது. Soft power என்பது கலை, இலக்கியம் மூலமாகப் பிறநாடுகளுடன் பண்பாடு ரீதியாக உறவை ஏற்படுத்திக் கொள்வது.

சென்னையில் ஜெர்மன் அரசு, 'Maxmuller bhawan' (மாக்ஸ்முல்லர் பவன்) என்ற ஒன்றை நடத்துகிறது. பிரெஞ்சு அரசு, 'Alliance Francaise Of Madras' என்றொரு பண்பாட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்திய அரசு உலகம் முழுக்க யோகா மையத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனாவோ, 'Confucius centre' (கன்ஃபூசியஸ் மையம்) என நடத்தி வருகிறது. சோவியத் யூனியன் தங்களின் இலக்கியத்தின் மூலம் உலகை அரவணைத்தது. அதைப் போலத்தான் தமிழ்நாடு அரசு இதேபோன்ற செயல்பாட்டை உலக அரங்கில் முன்வைக்கிறது" என்கிறார்.

''பென்னி குவிக்கின் பணியை நன்றியோடு நினைவுகூரும் வகையில், அவர் பிறந்த லண்டனிலேயே தமிழ்நாடு அரசு சிலை அமைப்பது என்பது காலம்கடந்தும் நிற்கக் கூடிய சாதனை'' எனக் கொண்டாடுகின்றனர், தமிழ் ஆர்வலர்கள்.

English summary
Tamil Nadu Chief Minister Stalin is trying to bring Tamil culture to the world Platform.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X