அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய விண்ணப்பம்.. நவம்பர் முதல் புது ரூல்ஸ்! இனி இப்படித்தான் கொடுக்கணும்
சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு, அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதற்கான விண்ணப்பங்களை இதுவரை ஆன்லைனிலும், காகித வடிவிலும் சமர்ப்பிக்க முடிந்தது. ஆனால், நவம்பர் மாதம் முதல் இந்த நடைமுறையில் மாற்றம் வரப்போகிறது. இனிமேல் ஓய்வூதிய விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை உத்தரவிட்டுள்ளது. அதை பற்றி பார்ப்போம்.
ஓய்வூதியம் தொடர்பான விண்ணப்பங்களை கொடுக்க வேண்டுமானால் இதுவரை 2 வழிகள் இருந்தன. ஒன்று, ஆன்லைனில் விண்ணப்பிப்பது. இன்னொன்று, விண்ணப்பத்தை காகிதத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரடியாக கொடுப்பது. இப்படி 2 வழிகளிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.
ஆனால், இந்த 2 முறைகளிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஆன்லைனில் கொடுக்கும் விவரங்களும், காகிதத்தில் கொடுக்கும் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களும் சில நேரங்களில் மாறுபடுகின்றன. இதனால் எந்த விவரத்தை வைத்து விண்ணப்பத்தை பரிசீலிப்பது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதற்காகத்தான் இனி ஒரே வழியில் விண்ணப்பங்களை பெற முடிவு செய்துள்ளனர்.

நவம்பர் முதல் அதிரடி
நவம்பர் மாதம் முதல் ஓய்வூதிய விண்ணப்பங்களை OPPAS என்ற இணையவழி அமைப்பு மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அதாவது, காகிதத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரடியாக கொடுக்கும் முறை இனி கிடையாது.
புதிதாக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பவர்கள் மட்டுமல்ல, ஏற்கனவே ஓய்வூதியம் பெற்று வருபவர்கள், தங்களுடைய ஓய்வூதிய விவரங்களில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலும் ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக நிரப்புவதுடன், தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
நவம்பர் முதல் காகிதத்தில் கொடுக்கப்படும் ஓய்வூதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. அப்படியே அனுப்பினாலும், அந்த விண்ணப்பங்களை பரிசீலிக்காமல் தலைமை கணக்காயர் அலுவலகம் திருப்பி அனுப்பிவிடும்.
சுற்றறிக்கை விவரம்
இதுகுறித்துதான், கருவூல அலுவலர்கள் மற்றும் துணை ஊதியம், கணக்குகள் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: "ஓய்வூதிய விண்ணப்பங்களை நேரடியாகக் காகித வடிவில் சமர்ப்பிப்பதால், இணையவழியில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கும், நேரடியாகப் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கும் இடையே வேறுபாடுகள் ஏற்பட்டு, ஓய்வூதிய நடைமுறைகளில் சிக்கல்கள் உருவாகியுள்ளன.
எனவே நவம்பர் மாதம் முதல் அனைத்து ஓய்வூதிய விண்ணப்பங்களும் இணையவழி ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி அனுமதி அமைப்பு மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், திருத்திய ஓய்வூதியத்துக்கான விண்ணப்பங்களையும் இதே இணையவழி அமைப்பு மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும். தேவையான அனைத்து விவரங்களும், பொருந்தக்கூடிய ஆதார ஆவணங்களும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
மேலும் அடுத்த மாதம் முதல் நேரடியாகக் காகித வடிவில் பெறப்படும் ஓய்வூதிய விண்ணப்பங்கள் எந்தப் பரிசீலனையும் செய்யப்படாமல் தலைமை கணக்காயர் அலுவலகத்தால் திருப்பி அனுப்பப்படும். எனவே, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சம்பளம் வழங்கும் அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, புதிய நடைமுறையைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். ஓய்வூதியப் பலன்கள் உரிய காலத்தில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் வசதிகள்
இனிமேல் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை பெறுவதால், விவரங்கள் மாறுபடுவதால் ஏற்படும் குழப்பங்களை ஈஸியாக தவிர்க்க முடியும். விண்ணப்பத்தில் ஏதாவது விவரம் விடுபட்டிருக்கிறதா, தேவையான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் சரிபார்ப்பதும் எளிதாகும்.
காகிதத்தில் வரும் விண்ணப்பங்களை தனியாக கையாள வேண்டிய தேவையும் இருக்காது. இதனால் விண்ணப்பங்களை சரிபார்ப்பது எளிதாகும். விண்ணப்பங்களில் ஏற்படும் குழப்பங்களும் தாமதங்களும் குறைந்து, ஓய்வூதியப் பலன்கள் சரியான நேரத்தில் கிடைக்கவும் இது உதவும் என்றே நம்பப்படுகிறது..!!


Click it and Unblock the Notifications
